புதிதாக 16,94,339 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை: 2-ம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

புதிதாக 16,94,339 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை: 2-ம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
Updated on
3 min read

சென்னை: ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்வில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது குறித்த அரசு செய்திக் குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இன்று (டிச.12) சென்னை, நேரு உள்விளையாட்டரங்கத்தில், தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் பல்வேறு முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிரின் அனுபவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொண்ட முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்ட விழா நடைபெற்றது.

இந்த விழாவில், 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 மகளிர் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, 10 மகளிருக்கு உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: மாதம் ரூ.1,000 வழங்கிடும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ கடந்த 2023 செப்டம்பர் 15-ல் காஞ்சிபுரத்தில் முதல் கட்டமாக சுமார் 1.13 கோடி பயனாளிகள் பயன்பெறும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மகளிருக்கே நேரடியாக சென்றடையும் வகையில் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம், மேலும் 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 மகளிர் பயனடையும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் மகளிருக்கு உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார். இதன்மூலம், மொத்தம் 1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று பயன்பெறுவர்.

இதே நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மகளிருக்கு நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் 1000 ரூபாயைச் செலுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம், விடியல் பயணம், மக்களை தேடி மருத்துவம், சுய உதவி குழுக்கள், வெற்றி நிச்சயம், நலம் காக்கும் ஸ்டாலின், பெண் தொழில் முனைவோர், தோழி விடுதிகள் போன்ற திட்டங்களில் பயனடைந்த மற்றும் சாதனை படைத்த பெண்களின் வெற்றிக் கதைகளை வெளிக்கொணரும் நிகழ்வாக மாநில அளவில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ விழா நடைபெற்றது.

பணி நிமித்தமாக தங்கள் சொந்த ஊர்களை விட்டு பிற நகரங்களுக்கு சென்று பணிபுரியும் பெண்களின் தேவைகளை உணர்ந்து தரமான, பாதுகாப்பான மற்றும் குறைந்த கட்டணத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதிகளான ‘தோழி விடுதிகள்’ தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

தோழி விடுதிகளில் தங்கி பயன்பெற்றுள்ள பயனாளிகள், விடுதிகளில் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பான சூழல் குறித்தும் எடுத்துரைத்து, இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் அரசுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

மக்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவ வசதிகளை அளிக்கும் மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் மக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் வழங்கிடும் வகையில் நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் திட்டம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் வாயிலாக பயன்பெற்ற பயனாளிகள் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில், நடிகை தேவயானி, திரைப்பட இயக்குநர் வசந்தபாலன், பெண்களுக்கான சிறப்பு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காவல் துறையை சார்ந்த பெண் கமாண்டோக்களின் சாகச நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர், பஞ்சாயத்து தலைவி, பெண் கவுன்சிலர், இஸ்ரோ திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி, மேஜர் ஜென்ரல் இக்னிசியஸ் ஃபிளோரா ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு, தங்களை ஊக்கப்படுத்தி வரும் தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதில் பெண் ஓதுவார், கல்பனா சாவ்லா விருது பெற்ற எழிலரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

எதிர்பாராத விபத்தில் கைகளை இழந்த பிஹார் மாநில இளைஞருக்கு குறுக்கு கைமீள் இணைப்பு மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு ஒரு கையை செயல்பட வைத்த சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவர் பி.ராஜேஸ்வரி தலைமையிலான பெண் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பத்து மணி நேரம் தாங்கள் மேற்கொண்ட Cross hand replantation என்ற உலகளவில் மிகவும் அபூர்வமான, சவாலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்த இளைஞரின் வாழ்வினை மீட்டெடுத்தது குறித்து விளக்கினார்கள்.

இந்நிகழ்வில், இஸ்ரோ திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள், கவிஞர் கவிதா ஜவஹர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெற்ற பெண் தொழிலாளர்கள், வேலைவாய்ப்பு பெற்று தங்கள் வாழ்வு மேன்மையுற உதவிய தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில், தையல் தொழில் செய்து வரும் முகாம்வாழ் இலங்கைத் தமிழ்ப் பெண் சாரா, முதல்வர் ஸ்டாலினுக்கு தான் எம்பிராய்டரி செய்து தயாரித்த ‘அப்பா’ என்ற எழுத்துடன்கூடிய கைக்குட்டையை வழங்கினார்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி எழிலரசி வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு கிடைத்து பயனடைந்த அனுபவத்தை சைகை மொழி மூலம் விளக்கி, தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில், நடிகர் சத்யராஜ், திரைப்பட இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஞானவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகள், இத்தொகையினை தங்கள் குடும்பத்தின் மேம்பாட்டிற்காக பயன்படுத்தியது குறித்து விளக்கி, தமிழ்நாடு அரசிற்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில், நடிகை ரோகினி, திரைப்பட இயக்குநர் ராஜு முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதிதாக 16,94,339 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை: 2-ம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
‘திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது கிரானைட் தூண்... தீபத்தூண் அல்ல!’ - அரசு, கோயில் தரப்பு பரபரப்பு வாதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in