“பழக்கத்தை மாற்றும் ஒரு சமுதாய இயக்கம்” - ‘ஸ்வச் பாரத்’ குறித்து கைலாஷ்நாதன் பேச்சு

“பழக்கத்தை மாற்றும் ஒரு சமுதாய இயக்கம்” - ‘ஸ்வச் பாரத்’ குறித்து கைலாஷ்நாதன் பேச்சு
Updated on: 
2 min read

புதுச்சேரி: “ஸ்வச் பாரத் என்பது வெறும் குப்பைகளை அகற்றும் திட்டம் அல்ல. அது பழக்கத்தை மாற்றும் ஒரு சமுதாய இயக்கம். நம்மைச் சுற்றியுள்ள இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை, மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்கும் இயக்கம்” என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கூறியுள்ளார்.

புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறை சார்பில் தூய்மை இந்தியா தினவிழா கம்பன் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கினார். மேலும், திடக்கழிவு மேலாண்மை தொடர்பான கையேட்டையும் வெளியிட்டார்.

இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தற்காலிக தலைவர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, சிவகொழுந்து, செல்வகணபதி எம்பி மற்றும் எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், “காந்தி தானே துடப்பம் எடுத்து குப்பைகளை அகற்றி இருக்கிறார். துடப்பம் - வாளி எடுத்து தானே கழிவறையை சுத்தம் செய்து இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை தூய்மை என்பது தூய்மை பணியாளரின் வேலை மட்டுமல்ல. அது ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பு. “இந்தியாவுக்கு சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தூய்மையும் முக்கியம்” என்று நினைத்தார். தூய்மைதான், இந்தியாவின் உண்மையான வளர்ச்சிக்கு அடிப்படை – தூய்மையே சேவை என்று உணர்த்தினார்.

அவருடைய அந்த மகத்தான சிந்தனையை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கத்தில் பிரதமர் மோடி, 2014-ல் காந்தியின் பிறந்த நாளான அக்.2-ல், ஸ்வச் பாரத் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். 10 ஆண்டுகளில், மிகப்பெரிய மக்கள் இயக்கமாக அது வளர்ந்து இருக்கிறது. தொடக்கத்தில், இந்த இயக்கத்தைப் பற்றி பலருக்கும் சந்தேகங்கள் இருந்தது. 120 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் பெரிய நாட்டை எப்படி தூய்மையாக மாற்ற முடியும்? வருடத்தில் ஒன்று-இரண்டு வாரங்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டால் இந்தியா தூய்மையாகிவிடுமா? என்றும் கேட்டார்கள். ஆனால், இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மை இருக்கிறது.

ஸ்வச் பாரத் என்பது வெறும் குப்பைகளை அகற்றும் திட்டம் அல்ல. அது பழக்கத்தை மாற்றும் ஒரு சமுதாய இயக்கம். நம்மைச் சுற்றியுள்ள இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை, மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்கும் இயக்கம். அதுதான் இந்த இயக்கத்தின் ஆழமான நோக்கம். அந்த மாற்றத்தை இன்று நாம் நாடு முழுவதும் பார்க்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தில் இந்த தூய்மை இந்தியா இயக்கத்தை அரசு தீவிரமாக முன்னெடுத்ததால் இன்று புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் நகராட்சிகள், பத்து கொம்யூன் பஞ்சாயத்துக்கள் திறந்த வெளி கழிப்பில்லா பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகள் சிறப்பு தகுதியைப் பெற்றி இருக்கின்றன. புதுச்சேரியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்த தூய்மை இந்தியா இயக்கம் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அதற்கு தூய்மைப் பணியாளர்களின் பங்கு மிக முக்கியம்.

அவர்கள் இந்த இயக்கத்தின் தூதுவர்களாக செயல்பட்டார்கள். நீங்கள் இல்லை என்றால், இந்த இயக்கம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்று இருக்காது. வெறும் கனவாக போயிருக்கும். நாம் தூங்கி எழுவதற்கு முன்பே அவர்கள் தூய்மைப் பணியைத் தொடங்கி விடுகிறார்கள். குப்பைகளை சேகரிக்கிறார்கள். சாலைகளை சுத்தம் செய்கிறார்கள். மழை, வெயில் என்று பார்க்காமல் அர்ப்பணிப்போடு வேலை செய்கிறார்கள். அவர்களுடைய கடமை உணர்வுக்கு நான் தலைவணங்கி, அவர்களை மனதார பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

“பழக்கத்தை மாற்றும் ஒரு சமுதாய இயக்கம்” - ‘ஸ்வச் பாரத்’ குறித்து கைலாஷ்நாதன் பேச்சு
தாராபுரத்தில் ஸ்டாலின் ‘ரோடு ஷோ’ - வழிநெடுகிலும் திரண்டு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in