

சென்னை: தமிழக காவல்துறை போதைப் பொருள் நெட்வொர்க்கை கண்டறிந்து துடைத்தெறியாமல் மேம்போக்காக செயல்படுகிறது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் தணிகாசலம் என்பவரை ஒரு கும்பல் கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளது. தணிகாசலம் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால் காவல்துறை குறிப்புகளில் அவர் இந்து முன்னணி பொறுப்பாளர் என்றுள்ளது.
அதனால் இந்து முன்னணி பொறுப்பாளர் கொலை என்று செய்திகளில் வந்துள்ளது. பல ஆயிரம் மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்கிறார்கள். அது பொதுநிகழ்வு ஆகும்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதைப் பொருள் நடமாட்டம், போதையால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் கொலைகள் பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம்.
இளம் பெண்கள் கஞ்சா போதையில் சாலைகளில் ரகளை செய்யும் காணொளி தமிழகத்துக்கு தலைக்குனிவு. கடந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கருதியது இந்த போதை குற்றங்கள்தான்.
இந்த ஆட்சியிலும் காவல்துறை போதைப் பொருள் நெட்வொர்க்கை கண்டறிந்து துடைத்தெறியாமல் மேம்போக்காக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது போன்ற சம்பவங்களால் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழக்க நேரிடும். குற்றங்கள் நிகழ்வதற்கு காவல்துறை வழக்கமான ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதான பயம் இல்லாததே முதன்மைக் காரணமாகும்.
தணிகாசலம் கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு கடுமையான தண்டனையை அரசு உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.