சென்னையில் பேட்டி அளித்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை.
காடுவெட்டி குரு மகள் ஜன.9-ல் புதிய கட்சி தொடங்குகிறார்
வன்னியர் சங்கத் தலைவராகவும், பாமக முன்னணி தலைவராகவும் இருந்தவர் மறைந்த காடுவெட்டி குரு. இவரின் மகள் குரு. விருதாம்பிகை. இவர், ஜெ குரு பாட்டாளி மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளார்.
இதுகுறித்து, சென்னையில் அவர் கூறியதாவது: புதிய கட்சியை சேலம் ஓமலூரில் வரும் 9-ம் தேதி தொடங்கவுள்ளோம். டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்துள்ளோம். கட்சியின் கொள்கை சமூக நீதி ஆகும். அனைத்து சமுதாய மக்களுக்கும் சரியான சமமான சமூக நீதி கிடைக்க வேண்டும். சமூக நீதியை முன்வைத்து வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்டது.
இந்த சங்கத்துக்கு தந்தை காடுவெட்டி குரு கடைசி வரை உறுதியாக உண்மையாக இருந்தார். பாமகவுக்காகவும் தந்தை பாடுபட்டார். ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகன் பாசத்தால் கட்சி கொள்கையில் இருந்து வெளியே வந்தார். தனது மகனுக்காக, இந்த சமுதாயத்தை பின்தங்கிய நிலைக்கு கொண்டு போனார். தற்போது, அந்த மகன், பாமக நிறுவனர் ராமதாஸை மோசமாக எதிர்ப்பதை ஏற்றுகொள்ள முடியவில்லை.
ராமதாசும், அன்புமணியும் சண்டை போட்டு இந்த சமுதாய மக்களை பின்தங்கிய நிலையிலேயே வைத்துள்ளனர். மேலும், எல்லா கட்சிகளும் வன்னியருக்கு எதிர்ப்பான நிலையிலேயே உள்ளன. கட்சியை தொடங்கி, வரும் 9-ம்தேதி முதல் சேலம், தருமபுரி உள்பட வட மாவட்டங்களில் 50 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து, ராமதாஸ், அன்புமணி ஆகியோர் செய்த சூழ்ச்சிகளை எடுத்து சொல்ல உள்ளோம். கட்சியின் மாநில மாநாட்டை பிப்.22-ம் தேதி தருமபுரியில் நடத்த இருக்கிறோம்.நாங்கள் வலுவான கூட்டணி அமைப்போம். பிப்.1-ம் தேதி தந்தையின் பிறந்தநாள் வருகிறது. அதை வன்னியர் ஜெயந்தியாக கொண்டாட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
