“பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதற்கான காரணம் அறியாமை” - கி.வீரமணி விமர்சனம்

கி.வீரமணி
கி.வீரமணி
Updated on
1 min read

புதுச்சேரி: அறியாமை மற்றும் திட்டமிடல் இல்லாததே பரந்தூர் நிலம் கைவிடப்பட்டதற்கான காரணம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

எதிர் நீச்சலில் வென்ற பெரியார் 80வது ஆண்டு விழா மற்றும் திறந்தவெளி மாநாடு புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் பாகூரில் நடந்தது.

இந்நிகழ்வுக்கு வந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஜாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசு செய்தால் அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்வதில்லை, மாநில அரசுக்கு அரசியல் சட்ட ரீதியாக மக்கள் தொகை கணக்கு எடுக்கின்ற அதிகாரம் இல்லை. சிலர் அறியாமை,ஆர்வக்கோளாறால் தான் மாநில அரசு கணக்கெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.

ஜாதி வாரி கணக்கெடுப்பில் மத்திய அரசுக்கு மட்டுமே உரிமைகள் உள்ளது . பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதை பிடிக்கும் நிலை தான் தற்போது உள்ளது, எளிதாக முடிவதற்கு பரந்தூர் நிலம் சினிமா செட் அல்ல, அதற்கான சட்டங்கள் உண்டு, மத்திய அரசு அனுமதி வேண்டும், பரந்தூர் இடத்தில் வேறு திட்டங்கள் கொண்டு வருவது என்பது காய்கறி தோட்டம் அமைப்பது கிடையாது.

விமான நிலையம் அமையும் பட்சத்தில் மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். எதிர்கால வளர்ச்சியை வாக்கு கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது வளர்ச்சி கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் அறியாமை மற்றும் திட்டமிடல் இல்லாததே பரந்தூர் நிலம் கைவிடப்பட்டதற்கான காரணம். அரசியலுடைய தனித் தன்மையே வித்தியாசமானது. இரண்டும் இரண்டும் நான்கு ஆகலாம்,பூஜ்ஜியம் ஆகலாம் அல்லது 16 ஆகலாம், தற்போது உள்ள சூழ்நிலையில் மூன்றாவது அணியும் உருவாகலாம் தற்போது இருக்கின்ற அணியும் உருமாறலாம்.

சட்டமன்றத்தில் இன்னும் விவாதங்கள் ஆக்கபூர்வமாக நடைபெறவில்லை காட்சியாக தான் நடைபெறுகிறது பேரவைத்தலைவர் மட்டும் நடுநிலையாக நடந்து கொண்டு சில செய்திகளை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறார். இதுவரை அரசியல் வரலாற்றில் ஆளுங்கட்சியினர் பேசும் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்கியதாக வரலாறு இல்லை. ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பேசுவதையே அதிகளவில் அவை குறிப்பிலிருந்து நீக்கியதுதான் தவெக அரசின் 100 நாளில் மிகப்பெரிய சாதனை” இவ்வாறு வீரமணி கூறினார்.

கி.வீரமணி
ஜல்லிக்கட்டை இழிவாகப் பேசினாரா தவெக எம்எல்ஏ? - அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in