

சென்னையில் நடந்த தேசிய கருத்தரங்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி நேற்று தொடங்கி வைத்தார். உடன், பாதிக்கப்பட்டோர் நீதி அறக்கட்டளைத் தலைவர் பி.ஜோதிமணி, சென்னை பல்கலை. முன்னாள் துறைத் தலைவர் திலகராஜ், உதவிப் பேராசிரியர் எஸ்.லதா, பல்கலை. பதிவாளர் ரீட்டா ஜான்.
சென்னை: நீதி வழங்கும் நடைமுறைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன உளைச்சலையோ, அதிர்ச்சியையோ ஏற்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை, சர்வதேச பாதிக்கப்பட்டோர் நீதி அறக்கட்டளை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சைபர் ஸ்பேஸ் சட்டம் மற்றும் நீதித்துறை, சென்னை டிஜிட்டல் ஃபாரன்சிக் மையம் ஆகியவை இணைந்து ‘பாதிக்கப்பட்டோருக்கான நீதி: சிக்கல்கள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பிலான இரு நாள்தேசிய கருத்தரங்கங்கை சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடத்தின.
பாதிக்கப்பட்டோர் நீதி அறக்கட்டளைத் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான பி.ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பேசியதாவது: சட்டத்தின் வரலாறு பழிவாங்குதல் என்ற நிலையிலிருந்து குற்றத்தடுப்பு முறைகளைக் கடந்து, தற்போது மறுவாழ்வு மற்றும் மீட்பு என்ற உயரிய நிலையை எட்டியுள்ளது.
இந்திய அரசி யலமைப்புச் சட்டத்தின் 39ஏ மற்றும் 21-வது பிரிவுகள் மனித மாண்பையும், அனைவருக்கும் சமமான சட்ட உதவியையும் உறுதி செய்கின்றன. நீதி வழங்கும் நடைமுறைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனஉளைச்சலையோ, அதிர்ச்சியையோ ஏற்படுத்தக் கூடாது.
சட்ட நடைமுறைகளுக்கு அப்பால் மனிதாபிமானமும் இரக்கமும் நீதித்துறையின் அடிப்படைப் பண்புகளாக இருக்க வேண்டும். காவல்துறையும் நீதித்துறையும் பரஸ்பர புரிதலுடனும் மனித நேயத்துடனும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, நீதிமன்றங்கள் அச்சத்தை ஏற்படுத்தும் இடங்களாக இல்லாமல், பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை ஆற்றும் பாதுகாப்பான இடமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னைப் பல்கலைக்கழக குற்றவியல் துறை முன்னாள் தலைவரும் டிஜிட்டல் தடயவியல் சிறப்பு மைய இயக்குநருமான திலகராஜ், குற்றவியல் துறை உதவிப் பேராசிரியரும், இணையவழி தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மையத்தின் பொறுப்பு இயக்குநருமான எஸ்.லதா, பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜான், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சைபர் ஸ்பேஸ் சட்டம் மற்றும் நீதித் துறையின் தலைவர் டாக்டர் ரஞ்சித் உம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சட்ட வல்லுநர்கள், தடயவியல் நிபுணர்கள்,வழக்கறிஞர்கள், காவல் துறை அதிகாரிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.