

சென்னை: அன்றாட வாழ்வில் நேர்மை, அறநெறியை கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வலியுறுத்தினார்.
சென்னை மண்டல ஜிஎஸ்டி, சென்ட்ரல் எக்சைஸ், கஸ்டம்ஸ் முதன்மை தலைமை ஆணையர் அலுவலகம் சார்பில் “பொது வாழ்வில் நேர்மை மற்றும் அறநெறி” என்ற தலைப்பில் உயர்நிலை கலந்துரையாடல் சென்னையில் நடைபெற்றது.
இதில் 1400-க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி, சென்ட்ரல் எக்சைஸ், கஸ்டம்ஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை அனைத்து அதிகாரிகளையும் ஒருசேர வாசிக்கச் செய்து உறுதிமொழி எடுக்கச் செய்தார்.
தொடர்ந்து, ஈசா வாஸ்ய உபநிடதங்களை எடுத்துக்கூறி சுயநலமின்மை, கடமை, பொது நம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
தனது வாழ்வியல் மற்றும் பணி அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், “பொது வாழ்வில் முடிவுகளை எடுப்பதற்கு அறநெறி கோட்பாடுகள் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
நேர்மையையும் அறநெறியையும் வெறும் சட்டப் பூர்வ கடமைகளாக எண்ணாமல் அவற்றை அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்.
பொது மக்களின் நம்பிக்கையும் ஜனநாயக நிறுவனங்களும் நீடித்து நிலைத்திருக்க அவை அவசியம்” என்று வலியுறுத்தினார்.
முன்னதாக ஜிஎஸ்டி, சென்ட்ரல் எக்சைஸ், கஸ்டம்ஸ் முதன்மை தலைமை ஆணையர் எஸ்.கே.விமலநாதன் பேசும்போது, மக்களுக்கு சேவை வழங்குவதில் அறநெறி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றின் பங்கை எடுத்துரைத்தார்.