

டி.கிருஷ்ணகுமார்
சென்னை: தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசின் சட்டத்துறை செயலர் பி.சுமதி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தை தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது.
அதன்படி, சட்ட ஆணையத்தின் தலைவராக மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கூடுதல் தலைமைச் செயலர் டி.கே.ராமச்சந்திரன், சட்டத்துறை முன்னாள் செயலர் ஏ.அருணகிரி ஆகியோர் ஆணையத்தின் முழுநேர உறுப்பினர்களாகவும், முன்னாள் மாவட்ட நீதிபதிகள் பி.மோகன்தாஸ், ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் பகுதிநேர உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டத்துறையில் செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி முழுநேர உறுப்பினர்-செயலராக செயல்படுவார்.
ஆணையத்தின் பணிகள்
மாநில சட்ட ஆணையம், தற்போது இருக்கின்ற சட்டங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும்.
சமூக பொருளாதார சட்ட நடவடிக்கைளையும் அரசுக்கு பரிந்துரை செய்யும். மேலும் மாநிலங்களுக்கு இடையிலான உறவுகளையும், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளையும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் ஆலோசனை வழங்கும்.
மாநில அரசு தொடர்புடைய மத்திய அரசு சட்டங்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் தொடர்பாகவும் அரசுக்கு ஆலோசனை வழங்கும்.
பதவிக்காலம்
மாநில சட்ட ஆணையத்தின் தலைவர், முழுநேர மற்றும் பகுதிநேர உறுப்பினர்கள் ஆகியோரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். இந்த ஆணையம் சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ கட்டிடத்தின் 5-வது தளத்தில் செயல்படும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.