

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு நாளை (11-ம் தேதி) வெளியிடப்படுகிறது. காலிப்பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சார்-பதிவாளர்,, தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர் (கிரேடு-2), தொழிலாளர் நலஉதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், முதுநிலை வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், பல்வேறு அரசு துறைகளின் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2-ஏ தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. கடந்த 2025-ம் ஆண்டு 595 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பி்ன்னர் காலியிடங்கள் 540-ஆக குறைக்கப்பட்டன.
டிஎன்பிஎஸ்சி 2026 ஆண்டுக்கான தேர்வு அட்டவணையின்படி இந்த ஆண்டு குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிடப்பட்டு, முதல்கட்ட தேர்வான முதல்நிலைத்தேர்வு அக்டோபர் 25-ம் தேதி நடத்தப்பட வேண்டும்.
வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து தேர்வுகளுக்கும் குறித்த தேதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என டிஎன்பிஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
அதன்படி, ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு நாளை (11-ம் தேதி) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
சார்-பதிவாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், தொழிலாளர் நல உதவி ஆய்வாளர், முதுநிலை வருவாய் உதவியாளர் உள்ளிட்ட வழக்கமான பதவிகளுடன் பல்கலைக்கழக உதவியாளர், இளநிலை உதவியாளர், மாநகர தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக்கழக இளநிலை உதவியாளர் உள்ளிட்ட புதிய பதவிகளும் முதல்முறையாக இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு துறைகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்து வரும் நிலையில், தவெக தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றிருப்பதால் காலிப்பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் நிரப்பப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித்தேர்வுகளில் குரூப்-4, குரூப்-2 தேர்வுகளுக்குத்தான் அதிகமானோர் விண்ணப்பிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.