திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கு: மேல்முறையீடு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கு: மேல்முறையீடு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு

Published on

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராகத் தாக்கலான மேல்முறையீடு மனுக்கள் மீது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி ராம.ரவிக்குமார் உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தர விட்டார். ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யவும், அதுவரை உத்தரவுக்குத் தடை கோரி தமிழ்நாடு அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 20 மேல்முறையீட்டு மனுக்களும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிராக 6 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிடும்போது, ‘‘எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் அறநிலையத் துறைக்கே உள்ளது.

தனி நீதிபதி தனது அதிகார எல்லையை மீறி அவசரமாக உத்தரவு பிறப்பித்துள்ளார்’’ எனத் தெரிவித்தார். ராம ரவிக்குமார் தரப்பு வழக்கறிஞர், ‘‘கோயி லுக்குச் சொந்தமான இடத்தில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுக்கக்கூடாது.

அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்ட பிறகே தனி நீதிபதி தீபம் ஏற்ற உத்தரவிட்டார்’’ என தெரிவித்தார். இதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஜன.6-ம் தேதி (இன்று) அளிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கந்தூரி விழா மேல்முறையீடு... இதற்கிடையே, சிக்கந்தர் தர்காவில் கந்தூரி விழாவுக்கு நிபந்தனைகள் விதித்து தனி நீதிபதி மதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசர மனுவாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் சிக்கந்தர் தரப்பு வழக்கறிஞர் நேற்று கோரிக்கை வைத்தார்.

அதற்கு நீதிபதிகள், ‘‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் தர்கா தொடர்பாகவும் விசாரிக் கப்பட்டுள்ளது. எனவே, தர்கா தரப்பின் தற்போதைய கோரிக்கை குறித்து விசாரிக்க முடியாது. மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்புக்கு பிறகு, முறையீடு இருந்தால் நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம்’’ என உத்தரவிட்டனர்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கு: மேல்முறையீடு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு
‘இந்து தமிழ் இயர்புக் 2026’ வெளியீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in