

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் காட்சிக் கூடத்தில் ‘இந்து தமிழ் இயர் புக் 2026'-ஐ நிறுவனத் தலைவர் ஆர்.பால கிருஷ்ணன் நேற்று வெளியிட, தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்தின் முதல்வர் தே.சங்கர சரவணன் பெற்றுக் கொண்டார். அருகில் ‘இந்து தமிழ் திசை’ அசிஸ்டென்ட் எடிட்டர் ஆதி வள்ளியப்பன், பதிப்பக பொறுப்பாசிரியர் வி.தேவதாசன்.
சென்னை: ‘இந்து தமிழ் இயர்புக் 2026' நூலை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் ஒடிஷா மாநில முன்னாள் தலைமைச் செயலாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.
‘இந்து தமிழ் இயர் புக்' கடந்த 2019-ம் ஆண்டு முதல் வெளியாகி வருகிறது. யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிறவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் 8-வது ஆண்டாக ‘இந்து தமிழ் இயர்புக் 2026' வெளிவருகிறது.
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் காட்சிக் கூடத்தில் நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் இந்நூலை நேற்று வெளியிட்டார். முதல் பிரதியை தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்தின் முதல்வர் தே.சங்கர சரவணன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், ஆர்.பாலகிருஷ்ணன் பேசும்போது, ‘‘தமிழ் அறிவு மரபின் அடையாளம் சங்க இலக்கியம், திருவள்ளுவர், தொல்காப்பியர். அந்த மரபின் இன்றைய வெளிப்பாடாக இந்து தமிழ் இயர்புக் 2026-ஐப் பார்க்கிறேன்.
அந்த வகையில் இந்த நூலை தொல்காப்பியர் சிலை முன்பாக வெளியிடுவதில் மகிழ்ச்சி. போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர் களுக்கு இந்த நூல் பெரிதும் உதவும்’’ என்றார். இந்த இயர்புக்கில் 15-க்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்களின் சிறப்புக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரலாறு, உலகை ஆளப்போகும் 20+ நவீனத் தொழில்நுட்பங்கள், டிஎன்பிஎஸ்சி பொதுத் தமிழ் தேர்வுக் குறிப்புகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மூத்த ஐஏஎஸ். அதிகாரி சஜ்ஜன் யாதவ் எழுதியுள்ள ‘ஐஏஎஸ். வெற்றிச் சூத்திரங்கள்' என்கிற விரிவான தேர்வு வழிகாட்டியும் இடம்பெற்றுள்ளது.
மேலும், கடந்த ஆண்டில் கவனம்பெற்ற 45 விஷயங்களுக்கான விரிவான விளக்கங்கள் ‘ஏன்? எதற்கு? எப்படி?' பகுதியில் தொகுத்து தரப்பட்டுள்ளன. வரலாறு - 50 கேள்விகள், விரிவான பதில்கள், விடுதலைப் போராட்ட வீரர், வீராங்கனைகள் 300 கேள்வி - பதில்கள் போன்றவை போட்டித் தேர்வுத் தயாரிப்புக்கு பெரிதும் உதவும்.
இவை தவிர, அறிவியல், மருத்துவம், சுற்றுச்சூழல், பொருளாதாரம் குறித்த கட்டுரைகள் தனித்தனிப் பகுதிகளாக இடம்பெற்றுள்ளன. 800 பக்கங்களைக் கொண்ட இந்த நூலின் விலை ரூ.275. இந்தப் புத்தகத்தை அஞ்சல்/கூரியர் மூலம் பெற ‘KSL MEDIA LIMITED’ என்கிற பெயரில் DD, Money Order, Cheque அனுப்ப வேண்டும்.
முகவரி: இந்து தமிழ்
இயர்புக் 2026, இந்து தமிழ் திசை,124, வாலாஜா சாலை, சென்னை – 600 002.
மேலும் விவரங்களுக்கு: 7401296562 / 7401329402 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு சலுகையாக தபால் செலவு இலவசம்.