மாநிலங்களவை இடைத்தேர்தலில் தவெக ஆதரவில் காங்கிரஸ் போட்டி: விஜய் முன்னிலையில் பிரவீன் சக்ரவர்த்தி வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவை இடைத்தேர்தலில் தவெக ஆதரவில் காங்கிரஸ் போட்டி: விஜய் முன்னிலையில் பிரவீன் சக்ரவர்த்தி வேட்புமனு தாக்கல்
Updated on
1 min read

சென்னை: நாடு முழுவதும் 24 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தல் ஜூன் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதுதவிர, 3 எம்.பி.க் கள் ராஜினாமா காரணமாக, 3 இடங்களுக்கான இடைத் தேர்தலும் அதே நாளில் நடத்தப்படுகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், தான் ஏற்கெனவே வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை மே 7-ம் தேதி ராஜினாமா செய்தார்.

இதனால், தமிழகத்தில் அந்த ஒரு இடத்துக்கான இடைத்தேர்தல் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 1-ம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 3 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் பிரதிநிதித்துவ அடிப்படையில் அதிக எம்எல்ஏக்களைக் கொண்ட தவெகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கப்பட வாய்ப்பு இருந்தது.

ஆனால், கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு மாநிலங்களவை எம்.பி. இடத்தை ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் அறிவித்தார். இதையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவை செயலர் சாந்தியிடம் தனது வேட்புமனுவை பிரவீன் சக்ரவர்த்தி நேற்று தாக்கல்செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் சக்ரவர்த்தி, ‘‘முதல்வர் விஜய்யின் பெருந்தன்மை, கருணையால் எனக்கு இந்த நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் தமிழக உரிமைகளை பாதுகாக்க எனது குரல் ஒலிக்கும்.

காங்கிரஸ், தவெக கூட்டணியின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துச் சொல்லவும் பாடுபடுவேன்’’ என்றார்.

மாநிலங்களவை இடைத்தேர்தலில் தவெக ஆதரவில் காங்கிரஸ் போட்டி: விஜய் முன்னிலையில் பிரவீன் சக்ரவர்த்தி வேட்புமனு தாக்கல்
முதல்வர் விஜய் ஜூன் 11-ம் தேதி டெல்லி செல்கிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in