

சென்னை: ‘விவாகரத்து வழக்குகளில் மைனர் குழந்தைகளின் உணர்வுகளுக்கும், விருப்பங்களுக்கும் கட்டாயம் மதிப்பளிக்க வேண்டும்’ என பெற்றோருக்கும், நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
கருத்து வேறுபாட்டால் மனைவியைப் பிரிந்து வாழும் கணவர் ஒருவர், விவாகரத்துக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தங்களது 11 வயது இரட்டையர்களான ஆண் குழந்தைகளுக்குச் சொந்தம் கொண்டாடி பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வார நாட்களில்தாயிடமும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தந்தையிடமும் இருக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து கணவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது ஷபீக் ஆகியோர் குழந்தைகளிடம் தனியாக விசாரித்தனர். அப்போது அவர்கள், தந்தையும் அவரது குடும்பத்தினரும் தங்களை உணர்வுப்பூர்வமாக துன்புறுத்துவதால்தாயிடமே இருக்க விருப்பம் தெரிவித்தனர்.
அதையடுத்து நீதிபதிகள், அவர்களை தாயாரின் பராமரிப்பிலேயே இருக்கவும் கல்வி,பராமரிப்பு செலவுகளை தந்தை ஏற்கவும் உத்தரவிட்டனர். மேலும் நீதிபதிகள், ‘‘விவாகரத்து வழக்குகளில் மைனர் குழந்தைகளின் உணர்வுகளுக்கும், விருப்பங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்’’ என பெற்றோருக்கும் நீதிமன்றங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.