சென்னை: மாம்பழத்துக்குப் பதிலாக அன்புமணிக்கும் பொது சின்னம் ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளார்.
பாமக யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான உள்கட்சி பிரச்சினை முடிவுக்கு வரும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கக்கோரி ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு அவசர வழக்காக நீதிபதி டி.வி. தமிழ்செல்வி முன்பாக நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மகாவீர் சிவாஜி, அருள் ஆகியோர், ``அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கிவிட்டோம். தற்போது அவர் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து மாம்பழ சின்னத்தைப் பெற்றுள்ளார்.
எனவே, யாருக்கும் மாம்பழ சின்னத்தை ஒதுக்கக்கூடாது. எங்களைப் போலவே அன்புமணிக்கும் பொதுவான வேறு ஒரு சின்னத்தை ஒதுக்கி யாருக்கு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என, வாதிட்டனர்.
அப்போது நீதிபதி, தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வேட்புமனுக்களும் பரிசீலிக்கப்பட்டு கடைசி கட்டத்தில் உள்ளது. இந்த சூழலில் மாம்பழம் சின்னத்தை முடக்கினால் அது பாமக-வுக்குத்தானே பாதிப்பை ஏற்படுத்தும், என்றார்.
அதற்கு ராமதாஸ் தரப்பில், ‘‘அன்புமணி தற்போது 18 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறார். அப்படியென்றால் அந்த 18 தவிர்த்த மற்ற தொகுதிகளில் போட்டியிடும் எங்கள் தரப்புக்கும் மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும், என கோரப்பட்டது.
அதற்கு அன்புமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் என்.எல்.ராஜா, சித்ரா சம்பத் ஆகியோர், ``தேர்தலில் நடைமுறைகளில் பாதியைத் தாண்டி விட்டோம். வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு சின்னமும் இறுதி செய்யும் தருவாயில் உள்ளது. பேருந்து புறப்பட்டு பலமணி நேரமாகி விட்டது.
இனி அதை விரட்டிப்பிடிக்க முடியாது. அவர்கள் வேண்டுமென்றால் இதுதொடர்பாக தேர்தல் வழக்கு தொடரலாம்’’, என்றனர். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், ‘‘பாமக தற்போது பதிவு செய்யப்பட்ட கட்சி மட்டுமே.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல. மாம்பழச் சின்னம் தற்போது பொதுப்பட்டியலில் உள்ளது. அதை முடக்க வேண்டும் எனக்கோர முடியாது. இதற்கு முன்பாக பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்ததால் அப்போது ஒதுக்கப்பட்ட மாம்பழச்சின்னம் தற்போதும் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது.
தேர்தல் நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் சின்னங்கள் ஒதுக்கீடு தொடர்பாக உயர் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது’’, என்றார்.
அதையடுத்து, நீதிபதி இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு (10-ம் தேதி) தள்ளி வைத்தார். அப்போது குறுக்கிட்ட ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்கள், அதுவரை அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், எனக் கோரினர். ஆனால் நீதிபதி, அந்த கோரிக்கையை ஏற்க முடியாது என மறுப்பு தெரிவித்தார்.