திருப்பரங்குன்றம் வழக்கில் பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டிய நீதிபதி!

திருப்பரங்குன்றம் வழக்கில் பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டிய நீதிபதி!
Updated on
2 min read

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வு உறுதி செய்தது.இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு 170 பக்கங்கள் கொண்டது.

தீர்ப்பின் தொடக்கத்தில் பைபிள் வசனத்தை நீதிபதிகள் மேற்கோள் காட்டியுள்ளனர். முடிவில் வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைத்த வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நீதிபதிகள் நன்றி தெரிவித்துள்ளார்.

அதன் விவரம்: ‘கடவுள், ஒளி உண்டாக கடவது என்றார், உடனே ஒளி உண்டாயிற்று’ - இது பிரபலமான விவிலியத்தில் ஆதியாகமம் 1:3-ல் இடம் பெற்றுள்ள வாக்கியமாகும். இதில் கடவுள் ஒளியைத் தம் வார்த்தையால் தோற்றுவிக்கிறார். இது படைப்பு, நம்பிக்கை மற்றும் தெய்வீக சக்தியைக் குறிக்கிறது.

திருப்பரங்குன்றம் விவகாரம் பேச்சுவார்த்தைகள் மூலம் சுமூகமாகத் தீர்க்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு விவகாரம், துரதிருஷ்டவசமாக சில சக்திகளால் பூதாகரமாக்கப்பட்டுள்ளது.

இதை வைத்து நீதித்துறையை மனச்சோர்வடையச் செய்யவும், இழிவுபடுத்தவும் முயற்சிகளும் நிகழ்ந்தன. இந்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்தபோது ​​மத்தியஸ்தம் மூலம் சுமூகத் தீர்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உணர்ந்தோம்.

இருப்பினும் வாதங்களை முன்வைக்கும்போது ​​2 சமூகங்கள் இடையே பகைமை நீடிக்கும் வரை தங்களுக்கு லாபம் என நினைத்து சூழலை கெடுப்பதற்கு பலர் காத்திருப்பதை நாங்கள் உணர்ந்தோம்.

முடிவுரையாக, விசாரணை நடைபெற்றபோது எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்த அனைத்து வழக்கறிஞர்களுக்கும், அவர்களின் வயது மற்றும் தகுதி வேறுபாடின்றி நன்றி தெரிவித்து பாராட்டுகிறோம். நீதிமன்றத்துக்குள் அவர்கள் கடைப்பிடித்த கண்ணியம் முன்மாதிரியாகவும் மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்தது.

இந்த வழக்கின் உள்ளார்ந்த நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதற்காக அவர்கள் வழங்கிய ஆவணங்கள், எங்களால் முடிந்தவரை சிறந்த முறையில் இந்தத் தீர்ப்பை எழுதுவதற்கு பேருதவியாக இருந்தன. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் மேலும் கூறியது: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது நடைமுறையில் இல்லாத வழக்கம் என்று அரசும், கோயில் நிர்வாகமும் கூறவில்லை. கோயிலுக்குச் சொந்தமான மலை உச்சியில் அமைந்திருக்கும் தூணில், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் கோயில் தரப்பில் விளக்கேற்ற அனுமதிப்பதால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்று அரசு அச்சப்படுவது அபத்தமானது.

அரசு தூண்டிவிட்டால் மட்டுமே குழப்பம் நிகழக் கூடும். எந்த அரசும், தங்கள் அரசியல் நோக்கங்களை அடைய இந்த அளவுக்கு தரம் தாழக் கூடாது. மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றினால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படக் கூடும் என்று மாவட்ட நிர்வாகம் வெளிப்படுத்திய அச்சம், அவர்களின் வசதிக்காக உருவாக்கிய கற்பனையே தவிர வேறில்லை. ஒரு சமூகத்தை, மற்றொரு சமூகத்துக்கு எதிராக சந்தேகம் கொள்ள வைக்கவே இது செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் வழக்கில் பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டிய நீதிபதி!
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணிலும் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in