திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண்.
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வு உறுதி செய்தது.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் கோயில் செயல் அலுவலர், மதுரை ஆட்சியர், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றும் வசதியுடன் கூடிய கல் தூண், தமிழில் 'தீபத்தூண்' என்று அழைக்கப்படுகிறது. அந்த தூண் அமைந்துள்ள இடம், உரிமையியல் நீதிமன்றத்தால் கோயிலின் சொத்து என அறிவிக்கப்பட்ட மலையின் ஒரு பகுதியில் உள்ளது. தற்போது வரை அந்த இடத்துக்கு வக்பு வாரியம் உரிமை கோரவில்லை.
இந்த வழக்கு விசாரணையின் போதுதான் முதல்முறையாக வக்பு வாரியம் சார்பில், விளக்குத் தூண் தர்காவுக்குச் சொந்தமானது என்று தீய உள்நோக்கத்துடன் கூடிய வாதம் முன்வைக்கப்பட்டது. கடந்த 1994-ம் ஆண்டு ரிட் மனுவில் நீதிமன்றம் தர்கா சொத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவுக்கு அப்பால் என்ற கட்டுப்பாடுடன், கோயிலுக்குச் சொந்தமான மலையில் வேறு எந்தப் பகுதியிலும் தீபம் ஏற்றுவதற்கான இடத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கியது. அந்த வழிகாட்டுதலின் நோக்கம், பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும். தீபம் ஏற்றுவதற்கான மாற்று அல்லது கூடுதல் இடத்தை தேர்வு செய்யும் போது, தர்கா சொத்தின் பாதுகாப்பு மட்டுமே கட்டாய நிபந்தனையாகும்.
உகந்த இடம்: இங்கு ‘தீபத்தூண்' என்று அழைக்கப்படும் கல் தூண், தர்கா அமைந்துள்ள உச்சியை விடத் தாழ்வான ஒரு பாறை உச்சியில் இருப்பதால், அது தீபம் ஏற்றுவதற்கு உகந்த இடமாகும். கார்த்திகை தீபம் மற்றும் பிறபண்டிகைகளின் போது உயரமான இடத்தில் தீபம் ஏற்றுவது வழக்கம். மலை அடிவாரத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பக்தர்கள் அதைப் பார்த்து வழிபடுவர். ஒளி என்பது சிவபெருமானின் உருவகம் என திருமூலர் கூறியுள்ளார். உயரமான இடத்தில் விளக்கேற்றும் வழக்கம் இருக்கும் போது, கோயில் சொத்தின் எல்லைக்குள் ஒரு இடம் கிடைக்கும் போது, அது ஒழுக்கம் மற்றும் பொதுக் கொள்கைக்கு விரோதமாக இல்லாத போது, பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோயில் நிர்வாகம் மறுக்க எந்தக் காரணமும் இல்லை.
தயக்கத்தை காட்டுகிறது: விளக்கேற்றுவதற்காக கோயிலைச் சேர்ந்த சிலரை மட்டும் தூண் பகுதிக்கு அனுமதித்து, பக்தர்களை மலையடிவாரத்தில் நின்று வழிபட செய்வது ஒன்றும் சமாளிக்க முடியாத செயல் அல்ல. இந்தக் கூட்டத்தால் அமைதிக்குக் குந்தகம் ஏற்படும், கூட்ட நெரிசல் ஏற்படும், சமூகங்களிடையே நல்லிணக்கமின்மை ஏற்படும் என்பது போல சித்தரிப்பது, சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதில் அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துவதா கவோ அல்லது சமூகங் களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் உள்ள தயக்கத்தையோ காட்டுகிறது.
2 சமூகங்கள்: இதை 2 சமூகங்களுக்கு இடையேயான வேறுபாடுகளைக் களைவதற்கு, மாநில அரசு வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அமைதியான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் இரு சமூகங்கள் இடையிலான இடைவெளியைக் குறைத்திருக்க முடியும். துரதிருஷ்டவசமாக இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையின்மையை மேலும் அதிகரிக்கவே செய்துள்ளன. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை, அந்தந்த சமூகங்களின் விழாக்களின் போது தேவைக்கேற்ப மாற்றத்தை ஏற்படுத்தி, செயல்படுத்துவதன் மூலம் மோதல் இல்லாமல் அமைதி மட்டுமே நிலவும் என நம்புகிறோம். எனவே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும். மலையில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க பொருத்தமான, அவசியமான நிபந்தனைகளை மத்திய தொல்லியல் துறை வகுக்க வேண்டும்.
தமிழ் மாதமான கார்த்திகையில், வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கோயில் நிர்வாகம் தனது குழுவின் மூலம் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும். தீபம் ஏற்றச் செல்லும் கோயில் தரப்பு குழுவுடன் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது. தீபம் ஏற்றும் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை மத்திய தொல்லியல் துறை மற்றும் காவல் துறையுடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைத்து மேற்பார்வையிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
அமைதி கெடும் என்பது அபத்தமானது: நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் மேலும் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது நடைமுறையில் இல்லாத வழக்கம் என்று அரசும், கோயில் நிர்வாகமும் கூறவில்லை. கோயிலுக்குச் சொந்தமான மலை உச்சியில் அமைந்திருக்கும் தூணில், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் கோயில் தரப்பில் விளக்கேற்ற அனுமதிப்பதால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்று அரசு அச்சப்படுவது அபத்தமானது. அரசு தூண்டிவிட்டால் மட்டுமே குழப்பம் நிகழக் கூடும். எந்த அரசும், தங்கள் அரசியல் நோக்கங்களை அடைய இந்த அளவுக்கு தரம் தாழக் கூடாது.
மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றினால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படக் கூடும் என்று மாவட்ட நிர்வாகம் வெளிப்படுத்திய அச்சம், அவர்களின் வசதிக்காக உருவாக்கிய கற்பனையே தவிர வேறில்லை. ஒரு சமூகத்தை, மற்றொரு சமூகத்துக்கு எதிராக சந்தேகம் கொள்ள வைக்கவே இது செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.