

ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன் என சிபிசிஐடி தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் உள்ளது.
இந்த எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி காவலாளியை கொலை செய்த ஒரு கும்பல் பங்களாவில் இருந்த சில ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக முக்கிய குற்றவாளி சயான் உட்பட 10 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கு மண்டல ஐஜி தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. அப்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தனிப்படை போலீசார் 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து கோடநாடு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் பல்வேறு கட்டங்களாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞர் கனகராஜ், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீஸாரும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் வாளையார் மனோஜும் ஆஜராகினர்.
இந்நிலையில், விசாரணையை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன் என நீதிபதி முரளிதரன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், இதுவரை 269 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பாக செல்போன் உரையாடல் மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்து குஜராத்தில் உள்ள பிஎஸ்என்எல் ஆய்வகத்திடம் இருந்து அறிக்கை கேட்டிருப்பதாகவும் இன்னும் அந்த நிறுவனத்திடமிருந்து தகவல்கள் வராததால் தாமதமாகி வருகிறது என்றும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஏப்.24-க்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.