

தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் ஏற்படும் போரில், தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும், இறுதியில் அறம்தான் வெல்லும் என்ற செய்தியை சொல்வதுதான் கம்பராமாயணம் தேரழுந்தூர் கம்பர் விழாவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசினார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த தேரழுந்தூரில் உள்ள கம்பர் கோட்டத்தில், தேரழந்தூர் கம்பர் கழகம் சார்பில் கம்பர் விழா நேற்று மாலை தொடங்கியது. விழாவின் தொடக்கமாக ஆமருவியப்பன் கோயிலில் இருந்து கம்பர் கோட்டம் வரை ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் மாணவர்களின் கம்பராமாயண பாராயணம் நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ‘கம்பனும் வைணவமும்’ என்ற நூலை வெளியிட, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி சத்தியமூர்த்தி பெற்றுக் கொண்டார். ஆமருவி தேவநாதன் நூல் மதிப்புரை வழங்கினார். டாக்டர் செல்ல முத்துகிருஷ்ணன் ஏற்புரை வழங்கினார்.
பின்னர் ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியது: இங்கு இரு சட்டக்கல்லூரி மாணவிகள் என்னிடம் வந்து ஆட்டோகிராப் கேட்டார்கள். அவர்களை பார்த்தபோது நெற்றி நிறைய விபூதி இருந்தது. நமது சமய அடையாளங்களை இட்டுக்கொள்வதற்கு கூச்சமே படக்கூடாது. அதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.
விழாவில் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், பாஜக மாவட்டத் தலைக்வர் நாஞ்சில் பாலு, கம்பர் கழக பொறுப்பாளர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தீபத்துக்கும் எனக்கும் என்ன பொருத்தம்? - விழாவில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர் பேசத்தொடங்கும்போது, “நிகழ்ச்சி தொடங்கும்போது குத்துவிளக்கு ஏற்றப்படும் என அறிவித்தார்கள். அனால், தீபம் ஏற்ற ஆனந்தமாக சென்றேன். ஆனால், ஐயா விளக்கை நீங்கள் ஏற்றக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.
(பெண்கள் குத்துவிளக்கு ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், அதை வைத்து நகைச்சுவையாக இவ்வாறு குறிப்பிட்டார்). அதனால் ரொம்ப ஏமாற்றமாக போய்விட்டது. எனக்கும் தீபத்துக்கும் என்ன பொருத்தம் என்று தெரியவில்லை. பரவாயில்லை, தீபம் ஏற்றும் நாள் வரும் என உறுதியாக நம்புகிறேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.