“தயவு செய்து மீண்டும் நடியுங்கள் விஜய்!” - ரசிகர்கள் சார்பாக நாசர் வேண்டுகோள்

“தயவு செய்து மீண்டும் நடியுங்கள் விஜய்!” - ரசிகர்கள் சார்பாக நாசர் வேண்டுகோள்
Updated on
1 min read

தயவு செய்து மீண்டும் நடியுங்கள் விஜய் என்று ரசிகர்கள் சார்பாக நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலேசியாவில் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் உள்ளிட்ட படக்குழுவினருடன் திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்பதால் பலரும் நெகிழ்ச்சியுடன் பேசினார்கள்.

இந்த விழாவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசும் போது, “அமைதியும், பணிவும் தவிர கூர்மையான ஆயுதம் வேறு எதுவுமில்லை. அதுவே உங்களின் அடையாளம். என் மகன் படுத்த படுக்கையாக இருந்தான். அவனை மீண்டும் நடக்க வைத்தவர் விஜய் தான். இதை பொதுவெளியில் அடிக்கடி சொல்ல வேண்டாம் என கூறியிருக்கிறீர்கள். அதை சொல்ல வேண்டியது எனது கடமை. இந்த மேடையில் மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ மேடைகளில் சொல்லவுள்ளேன். இதற்கு இந்த மேடையில் மட்டுமல்ல, என் வாழ்நாள் முழுவதும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

இந்த விழாவுக்கு போறேன் என்று சொன்னதும், அவன் விஜய் அண்ணாவுக்கு விஷ் பண்ணேன்னு சொல்லிடுங்கள் என்றான். நடிகர் சங்கத்துக்காக நீங்கள் ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்தீர்கள், அதற்கு என்னுடைய நன்றி.

‘ஜனநாயகன்’ படத்தில் இயக்குநர் முதல் டீ கொடுக்கிற பையன் வரை அனைவரிடமும் ஒரு பதட்டம் இருந்தது. ஏனென்றால் உங்களின் கடைசி படம், ஒரு தவறும் நேர்ந்துவிடக் கூடாதே என்று. ஆனால், நீங்களோ எந்தவொரு பதட்டமும் இல்லாமல் சிரித்துக் கொண்டே நடித்துக் கொண்டிருந்தீர்கள். ‘ஜனநாயகன்’ படத்தின் வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

எனக்கு ஒரே ஒரு வருத்தம் மட்டுமே. நான் எடுத்த முடிவை நானே மாத்த மாட்டேன் என்று நீங்கள் வசனம் பேசலாம். ஆனால் இங்கிருக்கும் ரசிகர்களின் வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறேன். உங்களை யாரும் விமர்சிக்கப் போறது கிடையாது. விமர்சனங்கள் வரும். ஏனென்றால் நீங்கள் விமர்சனங்களைத் தாங்கக்கூடிய பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். இங்குள்ள ரசிகர்களுக்கு நீங்கள் வேண்டும். தயவு செய்து நீங்கள் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும். இந்த வேண்டுகோளை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று பேசினார் நாசர்.

“தயவு செய்து மீண்டும் நடியுங்கள் விஜய்!” - ரசிகர்கள் சார்பாக நாசர் வேண்டுகோள்
‘தி ராஜா சாப்’ மாளவிகா மோகனன் தோற்றம் வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in