

மதுரை: நாட்டின் குடிமக்களைப் பாதுகாப்பது அரசுகளின் உயரிய கடமை என்று, மனு சாஸ்திரத்தை (மனுஸ்மிருதி) சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
சிவகாசியை சேர்ந்த மலர்விழி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் மாரிமுத்து 2021-ம் ஆண்டு மத்திய ஆப்பிரிக்காவுக்கு தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார்.
அங்கு பணியில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். என் கணவர் இறப்புக்கு கேமரூன் நாட்டு தொழிற்சாலை இந்திய மதிப்பில் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தது. இழப்பீட்டுத்தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நாட்டின் மன்னன் என்பவன் மக்களை மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வைத்திருக்க வேண்டும். வருமானத்தில் ஆறில் ஒரு பங்கைப் பெற்றாலும், மக்களைப் பாதுகாக்கத் தவறிய மன்னன் பாவியாகிறான் என்று மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.
தற்போது மன்னன் என்றால் அரசுகள். அரசுகள் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும் என மனு சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை புத்த மதமும் குறிப்பிடுகிறது. அரசு வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் மூலம் பெரும் அந்நியச் செலாவணியை ஈட்டுகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து அரசுகள் நன்மைகளைப் பெறும்போது, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் பிரச்சினைகள் எழும்போது அவர்களை மீட்க விரைந்து செயல்பட்டு, உரிய இழப்பீடு கொடுப்பதும் கடமையாகும்.
எனவே, தற்போதைய காலச்சூழலுக்கு ஏற்ப சட்டங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். தனது குடிமக்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கொள்கை சார்ந்த முடிவெடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் மனுதாரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். அவருக்கு கூடுதல் இழப்பீடு கிடைக்க மத்திய அரசு சட்டப் போராட்டம் நடத்த தயாராக இருக்க வேண்டும். மனுதாரருக்கு கூடுதல் இழப்பீடு கிடைக்க இந்திய தூதரகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.