

மதுரை: ‘‘நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணமாக காட்டுவதை மன்னிக்க முடியாது. இது சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் அரசியலமைப்பு இயந்திரம் முடங்கவும் வழிவகுக்கும்’’ என்று திருப்பரங்குன்றம் அவமதிப்பு வழக்கில் நீதிபதி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யன், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராயினர்.
தமிழக அரசு தலைமைச் செயலர் முருகானந்தம், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் காணொலி வழியாக ஆஜராயினர்.
அப்போது நீதிபதி, ‘‘இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை அதிகாரிகள் மீறியுள்ளனர், அவமதித்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் 144 தடை ஆணை பிறப்பித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது ஏன் என விளக்கம் அளிக்க வேண்டும். நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேனா என்று 2 நீதிபதிகள் அமர்வில் ஆட்சியர், காவல் ஆணையருக்காக ஆஜரான வழக்கறிஞர் ஏன் அப்படி கூறினார்’’ என்று தலைமைச் செயலரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு தலைமைச் செயலர் பதில் அளிக்கையில், ‘‘எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை ஆணை பிறப்பிக்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ள உத்தரவுகளின் அடிப்படையில்தான் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றக் கூடாது என்ற கருத்து இல்லை. அந்த உத்தரவுக்கு எதிராக 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்து அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாமல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் அவர்களாகவே 144 தடை ஆணை பிறப்பித்தார்களா? அல்லது அறிவுறுத்தல்களின் பேரில் உத்தரவு பிறப்பித்தார்களா என காணொலியில் ஆஜரான தலைமைச் செயலரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தலைமைச் செயலரிடம், திண்டுக்கல் மாவட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி ஒரு சட்டவிரோத தேவாலயக் கட்டுமானத்துக்கு எதிராக வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறியதும் சுட்டிக்காட்டப்பட்டது.
அங்கு பிரிக்கப்படாத குடும்பச் சொத்தில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாமல் ஒரு தேவாலயம் கட்டப்படுகிறது. அதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை (இன்று) விசாரணைக்கு வருகிறது. ஆனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் காரணமாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சட்டப்படி அந்த தேவாலயத்தின் கட்டுமானம் சட்டவிரோதமானது. அதிகாரிகள் தாங்களாகவே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அந்த கட்டிடத்தை தொடக்கூட அதிகாரிகள் தயங்குவது போல் தெரிகிறது. சட்டம் ஒழுங்கை வசதியான போலி காரணமாகப் பயன்படுத்துவது தெரிகிறது.
இவற்றை பார்த்து நான் சோர்வடைந்து விட்டேன். எத்தனை வழக்குகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீதிமன்ற அவமதிப்புக்காக நான் அழைக்க வேண்டும்? இன்றும், முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட ஒரு உரையைப் படித்த தலைமைச் செயலர், நீதித்துறை மீது தங்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தாலும், நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்தும் போது சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதை ஏற்க முடியாது.
ஒரு நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தால், உயர் நீதிமன்றத்தால் அதற்குத் தடை விதிக்கப்படாமலோ அல்லது அது ரத்து செய்யப்படாமலோ இருந்தால், அதற்கு கீழ்ப்படிய வேண்டும். நீதித்துறை உத்தரவைச் செயல்படுத்த முடியாத சூழ்நிலைகள் இருக்கலாம். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சட்டம் ஒழுங்கு என்பது நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதற்கான ஒரு காரணமாக இருக்க முடியாது. அது மன்னிக்க முடியாதது. அது சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு வழிவகுக்கும். அது அரசியலமைப்பு இயந்திரம் முடங்க வழிவகுக்கும்.
எனவே, இந்த நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தலைமைச் செயலர் பதிலளிக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை ஜன.9-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. நீதிமன்ற அவமதிப்பு செய்தவர்கள் அன்றைய தினம் ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
பதவி நீக்க நோட்டீஸை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். அந்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என்பதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தீர்மானம் நிறைவேற்றி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் வழங்கினர்.
இந்நிலையில், இந்த தீர்மான நோட்டீஸில் கையெழுத்திட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நோட்டீஸை ஏற்கக் கூடாது என்று மக்களவை செயலருக்கு உத்தரவிட கோரியும் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.