

புதுச்சேரி: “நான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அரசியலுக்கு வரவில்லை. மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வந்துள்ளேன். புதுச்சேரியை டென்மார்க், சிங்கப்பூர், அயர்லாந்து தரத்துக்கு உயர்த்த வேண்டும்.” என்று ‘லட்சிய ஜனநாயக கட்சி’ தொடக்கவிழாவில் ஜோஸ் சார்லஸ் மார்டின் கூறினார்.
புதுச்சேரியில் ஜேசிஎம் மன்றத்தை லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் தொடங்கியிருந்தார். அந்த மன்றத்தை இன்று லட்சிய ஜனநாயக கட்சியாக மாற்றினார்.
அதையொட்டி காலையில் மணக்குள விநாயகர் ஆலயம், தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயம், ஹம்ரத் சையத் அஹமத் மௌலா சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஆகியவற்றில் வழிபட்டார் . பின் அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி துறைமுகம் வந்து, அங்கிருந்து படகு மூலம் கடலுக்குள் சென்று லட்சிய ஜனநாயக கட்சியின் கொடியை கடலில் ஏற்றி அறிமுகம் செய்தார்.
நீலம், வெள்ளை, சிவப்பு நிறக் கொடியில் கையில் வேலேந்திய சிங்கம், 6 நட்சத்திரங்கள் மற்றும் நெற்கதிருடன் எல்ஜேகே என பொறிக்கப்பட்ட கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 64 படகுகள் எல்ஜேகே வடிவத்தில் நின்றன.
தொடர்ந்து பாண்டி மெரினா கடற்கரையில் நடைபெற்ற தொடக்க விழாவில் கட்சிக் கொடியேற்றி கட்சியின் நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பேசியதாவது:
எதற்காக அரசியல் என கேள்வி எழுப்புகின்றனர். காசு சம்பாதிக்க புதுச்சேரி வந்துள்ளதாக புரளி கிளப்புகின்றனர். அதற்காக நான் அரசியல் வர அவசியமில்லை. மக்களை ஏமாற்றி சம்பாதிக்கும் நோக்கம் இல்லை. மக்கள் கஷ்டப்படுகின்றனர் என்பதற்காவே இருக்கும் வேலையை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தேன்.
புதுச்சேரியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து மக்கள் உயிரிழக்கின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் குழந்தை இறக்கிறது. மருத்துவத்தில் மருந்து ஊழல் நடக்கிறது. புதுச்சேரியில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் ரகசிய கூட்டு வைத்துக்கொண்டு யாரும் யாரையும் கேள்வி கேட்பதில்லை.
மக்களுக்காக குரல் கொடுத்து பிரச்சினையை தீர்த்து சிங்கப்பூராக புதுச்சேரியை மாற்ற வேண்டும் என்று வந்தோம். ஊழல் இல்லாத டென்மார்க், மகிழ்ச்சியில் அயர்லாந்து போல், கார்பன் இல்லா பூடான் போல் புதுச்சேரியை கொண்டு வருவோம்.
உள்ளூர் அரசியல் செய்ய வரவில்லை- புதுச்சேரியில் நம்பர் 1 நகரமாக உலகரங்கில் கொண்டு செல்லவே விருப்பம்.
புதுச்சேரியை கூடிய விரைவில் சிங்கப்பூர், டென்மார்க், அயர்லாந்து மாதிரி மாற்ற வேண்டும். இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐந்து ஆண்டுகளில் இன்னும் பின்தங்கிவிடுவோம். புதுச்சேரியில் வென்று புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வந்த சுயேட்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கர், அமைச்சர் ஜான்குமாரின் மகன் ரீகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.