

மதுரை: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட அரசு வேலை, அதற்கு எதிரான வழக்குகளில் உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க தடைகோரி நாம் தமிழர் கட்சி தீரன் திருமுருகன் மற்றும் வழக்கறிஞர் சீனிஅகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவில், போட்டித் தேர்வு,தகுதி அடிப்படையில்தான் அரசுப் பணி வழங்கப்பட வேண்டும். அதை விடுத்து ஒரு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கினால், இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழப்பவர்களும் அரசு வேலை கேட்கும் நிலை ஏற்படும்.
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை. எனவே, கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை, உச்ச நீதிமன்ற விசாரணை முடியும் வரை அரசுவேலை வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தற்காலிக பணிதான் வழங்க வேண்டும். பணி நியமனம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இதே கோரிக்கை தொடர்பாக திண்டுக்கல் வேடசந்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமாரும் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், பதில் மனு தயாராகவில்லை. விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், அரசு வேலை பெற்றவர்கள் முதல் மாத ஊதியம் பெறுவதற்கு முன்பாக வழக்கை விசாரிக்க வேண்டும். ஜூலை 24-க்குள் பதில் மனு தாக்
கல் செய்ய வேண்டும். தொடர்ந்து அரசு தரப்பில், 31 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. இதில் 29 பேர் பணியில் சேர்ந்துள்ளனர் எனக் கூறப்பட்டது. பின்னர் நீதிபதிகள், அனைத்து பணி நியமனமும் இறுதி முடிவுக்கு உட்பட்டது. விளம்பர நோக்கத்துக்காக மனு தாக்கல் செய்வதையும் ஏற்க முடியாது. அனைத்து மனுக்களையும் ஜூலை 27-ல் விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.