

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லம் அருகே திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அதை முடித்துக்கொள்ள வேண்டுமென்றால் நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென்று தெரிவித்தார். அதற்கு அரசு ஒப்புக்கொண்ட நிலையில் அவர் வார்த்தை தவறிவிட்டார் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள், சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்று கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் சிவக்குமார், கேரள முதல்வர் வி.டி.சதீசன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் இல்லம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், அமித் ஷா பதவி விலக வேண்டும், நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராகுல் வார்த்தை தவறிவிட்டார்
இந்நிலையில், இந்த போராட்டம் குறித்து மத்திய இணை அமைச்சர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது:
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்களுக்கு இந்த போராட்டம் இடையூறை ஏற்படுத்தியது. இதையடுத்து போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு நானும், உள்துறை செயலரும் சென்றோம். அரசுடன் பேசி இதற்கு தீர்வு காண்பது சரியாக இருக்கும் என்பது எங்களது பார்வை.
நீட் மற்றும் பல்வேறு கல்வி சார்ந்த விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு ஒப்புக்கொண்டால் போராட்டத்தை உடனடியாக கைவிட தயார் என ராகுல் காந்தி எங்களிடம் தெரிவித்தார். அவரிடம் அது குறித்து மூன்று முறை கேட்டேன். பின்னர் அரசின் உச்ச தலைவர்களுடன் கலந்தாலோசித்தேன். அதன் பின்னர் நீட் மற்றும் தற்போது போராட்டம் சார்ந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு தயார் என்று அவரிடம் தெரிவித்தோம்.
ஆனால், அவரோ ‘மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்’ என்று சொன்னார். நீட் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்த வேண்டும் என்று கூறிய நிலையில், ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன். ‘இதுதான் எனது விருப்பம்’ என்று அதற்கு அவர் பதில் அளித்தார்.
இந்த விவகாரத்தில் தீர்வு காண உங்களுக்கு விருப்பம் இல்லையா என்று அவரிடம் நான் கேட்டேன். ஆனால், அவரோ தங்களது போராட்டம் தொடரும் என்றார். வேண்டுமானால் நீங்கள் எங்களை இங்கிருந்து வெளியேற்றுங்கள் என்று சொன்னார். அவர் இதற்கு சுமூக தீர்வு காண விரும்பவில்லை.
நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கடுமையான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி, இன்று காலை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நம் நாட்டின் மாணவர்களுக்கு இந்த அரசு அநீதி இழைக்காது. இந்த விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அறவே ஒத்துழைப்பு தரவில்லை. அவர் வார்த்தை தவறிவிட்டார். இதனை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு உள்ளனர்” என்றார்.