

சென்னை: கடந்த 2011-15 அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2,202 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு எம்பி, எம்எல் ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.லோகேஸ்வரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது முதல்கட்டமாக, செந்தில் பாலாஜி உள்ளிட்ட 50 பேர் ஆஜராகியிருந்தனர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் பென் டிரைவ்வில் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.ஒய். ஜார்ஜ் வில்லியம்ஸ், குற்றப்பத்திரிகை நகலை காகிதமாக வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
மேலும் 50-க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டியிருப்பதால் இட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு விசாரணையை நேரு ஸ்டேடியம் அல்லது தீவுத்திடலில் நடத்த வேண்டும், என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு அரசு தரப்பில், இந்த வழக்கு விசாரணையை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் அடுத்தகட்டமாக 51 முதல் 100 வரை குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களுக்கு குற்றப்பத்திரிகை நகலை வழங்குவதற்காக விசாரணையை நவ.11-க்கு தள்ளிவைத்தார்.
இதற்கிடையே இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜராக 3 சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசின் சட்டத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக வி. செந்தில்முருகன், சித்தார்த், ஆர்.சதீஸ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட தமிழ்வேல் என்பவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன், ‘செந்தில்பாலாஜியை காப்பாற்றும் நோக்கிலும், வழக்கை இழுத்தடித்து நீர்த்துபோகச் செய்யும் வகையிலும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக்கூறி விசாரணையை நவ.17-க்கு தள்ளிவைத்துள்ளார்.