டெல்லி பேரணியில் பங்கேற்காத தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 35 பேர் சஸ்பெண்ட்

டெல்லி பேரணியில் பங்கேற்காத தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 35 பேர் சஸ்பெண்ட்
Updated on: 
2 min read

சென்னை / புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்காத, தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 35 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மத்திய பாஜக அரசுடன் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாகக் கூறி, ‘இண்டியா’ கூட்டணி சார்பில் நவ.1-ம் தேதி டெல்லியில் பேரணி நடைபெற்றது.

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமை வகித்திருந்தார். இதில், ‘இளைஞர் காங்கிரஸின் தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்’ என காங்கிரஸ் தேசியத் தலைமை அறிவுறுத்தி யிருந்தது.

பேரணியில் நிர்வாகிகளின் வருகையை உறுதி செய்வதற்காக, டெல்லி மின்டோ சாலையில் பார்-கோடு ஸ்கேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், இளைஞர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ‘வித் ஐஒய்சி' செயலி மூலம் தங்களது வருகையைப் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால், பல நிர்வாகிகள் இந்தப் பேரணியில் பங்கேற்கவில்லை. இதனால் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டமும் வரவில்லை. இது காங்கிரஸ் தேசியத் தலைமையை அதிர்ச்சியடையச் செய்தது.

இதையடுத்து, கட்சியின் உத்தரவை மீறியவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 200 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 7 மாநிலங்களைச் சேர்ந்த 185 நிர்வாகிகளுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உட்கட்சி ஆய்வுக்குப் பிறகு சஸ்பெண்ட் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனத் தெரிகிறது.

அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 60 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தில் 49, மேற்கு வங்கத்தில் 26, தெலங்கானாவில் 14, உத்தரப்பிரதேசத்தில் 13, இமாச்சல பிரதேசத்தில் 13, ஹரியானாவில் 10 பேர், தமிழகத்தில் 35 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கூறும்போது, ‘‘ராகுல் காந்தி தலைமையிலான பேரணியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர். அதேநேரம் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டும் சிலர் அதை கடைபிடிக்கவில்லை.

பொறுப்புணர்வை உறுதிசெய்யும் வகையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக கட்சிப்பணிகளில் தீவிரமாகச் செயல்படும் தொண்டர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும்’’ என்றார்.

நினைவுச் சடங்குக்கு சென்ற நிர்வாகி நீக்கம்!

சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்பாக இளைஞர் காங்கிரஸின் தேசியப் பொதுச்செயலாளர் ரோஹித் ரஜோரியா கூறும்போது, ‘‘கட்சிக்காக 15 ஆண்டுகள் உழைத்துள்ளேன். 15 எப்.ஐ.ஆர்-களை எதிர்கொண்டு, போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறைக்கும் சென்றுள்ளேன்.

ஒரே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்காததற்காக விளக்கம் கூடக் கேட்காமல் பதவியை விட்டு தூக்கியுள்ளனர். என் சித்தப்பாவின் 13-வது நாள் நினைவுச் சடங்கு இருந்ததால் டெல்லி பேரணிக்கு வர முடியாது என முன்னரே தலைமைக்குத் தெரிவித்துவிட்டேன். இப்படிச் செயல்பட்டால் கட்சி எவ்வாறு மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்?’’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

டெல்லி பேரணியில் பங்கேற்காத தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 35 பேர் சஸ்பெண்ட்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 06 நவம்பர் 2026

X