விஐடி சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழா: தமிழை வளர்ப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு - ஜே.சி.டி.பிரபாகர் கருத்து

| படம்: எம்.முத்துகணேஷ் |

| படம்: எம்.முத்துகணேஷ் |

Updated on: 
2 min read

மேலக்​கோட்​டையூர்: விஐடி சென்​னை​யில் டாக்​டர் உ.வே.​சாமி​நாதையர் நூல் நிலை​யம் சார்​பில் முப்​பெரும் விழா நேற்று நடை​பெற்​றது.

விழாவுக்கு விஐடி நிறு​வனர், வேந்​தர், டாக்​டர் உ.வே.​சாமி ​நாதையர் நூல் நிலை​யத்​தின் தலை​வர் கோ.​விசுவ​நாதன் தலைமை தாங்​கி​னார். சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​கொண்​டார்.

துணைத் தலை​வர் ஜி.​வி.செல்​வம் பங்​கேற்று உரை​யாற்​றி​னார். விழா​வில் தமிழ் மொழிக்கு ஆற்​றிவரும் தொண்​டைப் பாராட்​டி, தமிழ்ப் புல​வர் வே.​பது​ம​னாருக்கு மகா​வித்​து​வான்  மீனாட்​சிசுந்​தரம் பிள்ளை விருதும், பேராசிரியர் ஆ.இ​ரா.வேங்​க​டாசலப​திக்கு டாக்​டர் உ.வே.​சா. விருதும் வழங்​கப்​பட்​டன.

சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் விருதுகளை வழங்கி கவுர​வித்​தார். மேலும் ‘நன்​னூல் மூல​மும் மயி​லை​நாதருரை​யும்’ என்​னும் நூலை​யும் வெளி​யிட்​டார். விஐடி துணைத் தலை​வர் ஜி.​வி.செல்​வம் முதல் பிர​தியை பெற்​றுக்​கொண்​டார்.

விழா​வில் ஜே.சி.டி.பிர​பாகர் பேசும்​போது, “அரிய தமிழ் நூல்​களை செம்​மை​யான பதிப்​பு​களாக மீண்​டும் வெளி​யிடு​வது, தமிழ் அறிவு மரபைப் பாது​காப்​பதுடன், எதிர்​காலத் தலை​முறை​யினருக்​கும் அவற்றை எளி​தில் கிடைக்​கச் செய்​யும். தமிழை வளர்ப்​பது என்​பது தமிழ்த் துறை​யின் பொறுப்பு மட்​டும் அல்ல.

அரசு நிறு​வனங்​கள், கல்வி நிறு​வனங்​கள், பல்​கலைக்​கழகங்​கள், ஆய்வு மையங்​கள், நூல​கங்​கள், பதிப்​பகங்​கள், தமிழறிஞர்​கள், ஆசிரியர்​கள், மாணவர்​கள் என அனை​வரும் இணைந்து செயல்​படும்​போது​தான் தமிழ் அடுத்த தலை​முறைக்கு முழு​மை​யாகச் சென்​றடை​யும்.

தமிழின் இலக்​கி​யத்​தை​யும், இலக்​கணத்​தை​யும் பாது​காப்​பது அறிஞர்​களின் பணி​யாக மட்​டும் இருக்​கக்​கூ​டாது. அது ஒட்​டுமொத்த சமூகத்​தின் பொறுப்​பு.

இன்​றைய தலை​முறைக்கு தமிழ் நூல்​களை எளி​தில் கிடைக்​கச் செய்​வதும், அரிய நூல்​களை பதிப்​பிப்​பதும், அவற்றை மின்​னணு வடி​வில் பாது​காப்​பதும், மாணவர்​களிடையே தமிழாய்வை ஊக்​கு​ விப்​பதும் காலத்​தின் தேவை​யாகும்” என்றார்.

விழா​வில் விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் பேசும்​போது, “அரசி​யல் கட்​சிகள் எப்​போதும் மோதல் போக்​குடன் இருக்​கக்​கூ​டாது. பொது​மக்​கள் தொடர்​பான முக்​கியப் பிரச்​சினை​களில் ஒத்​துழைப்பு தேவைப்​படும்​போது அனைத்​துக் கட்​சிகளும் ஒன்​றிணைந்து செயல்பட வேண்​டும்.

இதற்கு நார்​டிக் நாடு​களான நார்​வே, ஸ்வீடன், டென்​மார்க், ஐஸ்​லாந்து மற்​றும் பின்​லாந்​தில் உள்ள அரசி​யல் கட்​சிகளிடம் காணப்​படும் ஒற்​றுமையை நாம் பின்​பற்றி நாட்​டின் வளர்ச்​சிக்​குப் பாடுபட வேண்​டும்.

எவ்​வளவு வேறு​பாடு​கள் இருந்​தா​லும், ஒத்​துழைப்பு தேவைப்​படும் நேரங்​களில் ஆளும் கட்​சி​யும் எதிர்க்​கட்​சிகளும் இணைந்து செயல்பட வேண்​டும். அத்​தகைய அரசி​யல் சூழல் மீண்​டும் தமிழகத்​தில் உரு​வாக வேண்​டும். தமிழகம் இந்​தி​யா​வுக்கு முன்​மா​திரி​யாகத் திகழ வேண்​டும்” என்​றார்.

விழா​வில் விஐடி துணைத் தலை​வர் ஜி.​வி.செல்​வம் பேசும்​போது, “சிங்​கப்​பூர், மலேசி​யா, மொரீஷியஸ், அமெரிக்கா மற்​றும் பல ஆப்​பிரிக்க நாடு​களில் வசிக்​கும் தமிழ்ச் சமூகங்​கள் தொடர்ந்து தமிழ் மொழி​யுட​னான தொடர்​பைப் பேணிக் காத்து வரு​கின்​றன.

அவர்​கள் தமிழ் மொழி​யில் பேசுவதைப் பெரு​மை​யாகக் கருதுகின்​றனர். தமிழகத்​தில் தமிழை அனை​வரும் அறிந்​திருந்​தா​லும், சிலர் தமிழில் பேசவே தயங்​கு​கின்​றனர்.

தமிழ் மொழி​தான் நமது அடை​யாளம். அதை நாம் பெரு​மை​யுடன் பேச வேண்​டும். இன்​றைய தலை​முறை​யினர் இடையே வாசிப்​புப் பழக்​கம் குறைந்து வரு​வதுடன், கவனிக்​கும் திறனும் குறைந்து வரு​கிறது.

எனவே, தமிழ் அறிஞர்​கள், வரலாற்று ஆய்​வாளர்​கள் மற்​றும் பேராசிரியர்​கள் சமூக வலை​தளங்​களை அதி​கள​வில் பயன்​படுத்​தி, தமிழ் மொழியை​யும் அதன் வரலாற்​றை​யும் இளைய தலை​முறை​யிடம் கொண்டு செல்ல வேண்​டும்” என்​றார்.

விருது பெற்ற புல​வர் வே.​பது​ம​னார், பேராசிரியர் ஆ.இ​ரா.வேங்​க​டாசலபதி ஆகியோர் ஏற்​புரை நிகழ்த்​தினர். சென்னை பல்​கலைக்​கழகத்​தின் முன்​னாள் தமிழ்த் துறைத் தலை​வர் ய.மணி​கண்​டன், பொருநைப் பக்​கங்​களின் நிறு​வனர் ச.ஆவுடையப்​பன், டாக்​டர் உ.வே.​சா. நூல் நிலை​யத்​தின் துணைத் தலை​வர்​ சிவால​யம்​ ஜெ.மோகன்​ ஆகியோர்​ பங்​குபெற்​று உரை​யாற்​றினர்​.

<div class="paragraphs"><p>| படம்: எம்.முத்துகணேஷ் |</p></div>
மாநகராட்சிகளின் பாதாள சாக்கடை திட்டங்களில் தனியார் பங்களிப்பு: மதுரை, நாகர்கோவிலில் சாத்தியக்​கூறுகளை ஆய்வு செய்ய டெண்டர் வெளியீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in