

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரு லட்சம் ரூபாயை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ரூ.1,00,120-க்கு விற்பனையானது. இதனால், சுப காரியங்களுக்கு நகை வாங்கத் திட்டமிட்டுள்ள மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உலக அளவில் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்படும் ஆபரணமாக இருக்கிறது தங்கம். இது, மக்களின் தனிப்பட்ட செல்வநிலை மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. பொதுவாக தங்கம் விலை, சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு மார்ச்சில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தையும், அதே ஆண்டு மே மாதத்தில் ரூ.55 ஆயிரத்தையும் தாண்டியது.
2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஜன.3-ம் தேதி ரூ.58,080 ஆக உயர்ந்த தங்கம் விலை ஜன.22-ம் தேதி ரூ.60 ஆயிரத்தை தொட்டது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, கிடுகிடு உயர்வை சந்திக்கத் தொடங்கியது தங்கம் விலை. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிகப்படியான வரி விதிப்பு, எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
குறிப்பாக, செப்.24-ம் தேதி ரூ.85 ஆயிரத்தை தாண்டியது. அக்.17-ம் தேதி ரூ.97 ஆயிரத்தை தாண்டி, மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அன்று ரூ.97,600-க்கு தங்கம் விற்பனையானது. அதன்பிறகு, தங்கம் விலை சற்று ஏற்ற, இறக்கமாக இருந்த நிலையில், கடந்த டிச.9-ம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. டிச.12-ம் தேதி ரூ.98,900-ஐ கடந்தது. அன்றைய தினம் 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,370-க்கும், ஒரு பவுன் ரூ.98,960-க் கும் விற்பனையானது. அடுத்த 3 நாட்கள் அதே விலையில் நீடித்தது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு லட்சம் ரூபாயை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.145 என பவுனுக்கு ரூ.1,160 உயர்ந்தது. இதனால், 22 காரட் தங்கம் நேற்று ஒரு கிராம் ரூ.12,515, ஒரு பவுன் ரூ.1,00,120 என உயர்ந்தது. இதன்மூலமாக ஆபரணத் தங்கம் விலை முதல்முறையாக 6 இலக்கத்தை தொட்டுள்ளது. நேற்று 24 காரட் சுத்த தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,653, ஒரு பவுன் ரூ.1,09,224 ஆக இருந்தது.
இந்த 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஜன.3-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.58,080 ஆக இருந்த நிலையில், நேற்று ரூ.1 லட்சத்தை கடந்துள்ளது. இதன்மூலம், 11 மாதங்களில் பவுனுக்கு ரூ.42,040 வரை உயர்ந்துள்ளது. தங்கம் விலை உயர்வால், சுப காரியங்களுக்காக நகை வாங்க திட்டமிட்டிருந்த ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வெள்ளி விலையும் உயர்வு: இதேபோல, வெள்ளி விலையும் சமீபகாலமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.210-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2.10 லட்சத்துக்கும் விற்கப்பட்ட நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.5 என கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்தது. இதனால், நேற்று ஒரு கிராம் ரூ.215-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2.15 லட்சத்துக்கும் விற்பனையானது.
தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, ‘‘தங்கம் மீதான முதலீடு அதிகரித்திருப்பதே விலை உயர்வுக்கு முக்கிய காரணம். பெரும்பாலான நாடு கள் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகப்படுத்தியது, வர்த்தகப் போர், சர்வதேச பொருளாதார வீழ்ச்சி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. வரும் காலங்களிலும் தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளது’’ என்று தெரிவித்தார்.