

திருச்சி: மத்திய பிரதேசம் ஜபல்பூர் பர்கி அணையில் படகு மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேரின் உடல்கள் திருச்சி வந்தன.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்தவர் காமராஜ் (39). மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் கமேரியாவில் உள்ள மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூரைச் சேர்ந்த கார்குழலி. இவர்களது மகன்கள் புவிதரன் (11), தமிழ்வேந்தன் (6).
இதில், தமிழ்வேந்தனுக்கு மே 7-ம் தேதி பிறந்த நாள் வருகிறது. பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கார்குழலியின் தாய், தந்தை, சகோதரர் பரிமேலழகர், இவரது மனைவி சவுபாக்கியம், மகன் மயூரன், மகள் இனியா ஆகியோர் ஜபல்பூர் சென்றிருந்தனர். அங்கு ஏப்.30-ம் தேதி மாலை ஜபல்பூர் பர்கி அணையில் அனைவரும் படகு சவாரி சென்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதில் காமராஜ், கார்குழலி, தமிழ்வேந்தன், சவுபாக்கியம், மயூரன் ஆகியோர் நீரில் மூழ்கினர். பரிமேலழகர், புவிதரன், இனியா ஆகியோர் உயிர் தப்பினர். கார்குழலியின் பெற்றோர் படகில் செல்லாத நிலையில் அவர்களும் உயிர் தப்பினர். கார்குழலி, சவுபாக்கியம் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காமராஜ், தமிழ்வேந்தன், மயூரன் ஆகியோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த திருச்சி எம்.பி. துரை வைகோ, ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் ராகவேந்திரா சிங்கை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதுபற்றி துரை வைகோ கூறும்போது, “ஹெலிகாப்டர் உதவியுடன் ராணுவத்தினர், மாநில பேரிடர் மீட்புப் படை, காவல் துறை, உள்ளூர் மீனவர்கள், மாவட்ட நிர்வாகம் இணைந்து இரவு பகலாக தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் அனைவரது உடல்களையும் மீட்டு விடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, திருச்சிக்கு கொண்டு வரப்படும் கார்குழலி, சவுபாக்கியம் ஆகியோர் உடல்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தந்துள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மத்திய பிரதேசத்தில் மீட்புப் பணிகளில் உதவி புரிந்து வரும் தமிழரான ஐஏஎஸ் அதிகாரி இளையராஜா ஆகியோருக்கு நன்றி” என்றார். இதனிடையே இருவரது உடல்களும் பாதுகாப்புத் துறை விமானத்தில் நேற்றிரவு திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
தலைவர்கள் இரங்கல்: இந்த உயிரிழப்பு சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தது துயரம் தருகிறது. நீரில் மூழ்கியபோதும் 4 வயது மகனை அணைத்தபடி மரணித்துள்ள தாயின் புகைப்படம் நெஞ்சை உலுக்குகிறது. அனைத்து மாநில அரசுகளும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளைக் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.
தவாக தலைவர் வேல்முருகன்: மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு தமிழகத்துக்கு கொண்டுவரவும் காணாமல் போனவர்களைக் கண்டறிவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.