

சென்னை: உலக அரங்கில் முன்னிலை வகிக்க, சென்னையின் வளர்ச்சி பல மடங்காக இருக்க வேண்டும். நீடித்த வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக மின்வாரியத்தின் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னையின் எதிர்காலத்தை வடிவமைப்பது குறித்து கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக மின்வாரியத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: சென்னையின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று அதன் வரலாறு.
இந்த நகரம் படிப்படியாகக் கட்டமைக்கப்பட்டது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு சக்தி அளிக்கும் கலாச்சாரம், தொழில்முனைவு, மீள்தன்மை மற்றும் அசாதாரண திறமைகளைக் கொண்டுள்ளது சென்னை. மருத்துவம், கலாச்சாரத்தின் தலைநகராகவும் விளங்குகிறது.
ஒருங்கிணைப்பு தேவை: நகரில் போக்குவரத்தை வடிவமைக்கவும், பொது சுகாதாரத்தை வலுப்படுத்தவும், பொருளாதார வாய்ப்பை உருவாக்கவும் தொடர்ச்சியாக வழிகாட்ட வேண்டும். உலக அரங்கில் நம்பிக்கையுடன் போட்டியிடுவதன் மூலமாக சென்னை முன்னிலை வகிக்க வேண்டும்.
அதற்கு அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் இடையே ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. நாம் ஒரே நோக்கில் ஒன்றாக நகரும்போது, நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
சென்னையில் வளர்ச்சி பல மடங்காக இருக்க வேண்டும். மேலும், நீடித்த வளர்ச்சியில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ‘சூப்பர் சென்னை’ நிர்வாக இயக்கு
நர் ரஞ்சித் ரத்தோட் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு, தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.