

படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் முன்னாள் தமிழக சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ராஜாராம் “நூற்றாண்டு விழா” கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டனர்.
அதேபோல் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விஐடி வேந்தர் விசுவநாதன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே, முன்னாள் எம்.பி.திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ராஜாராமின் நூற்றாண்டு சிறப்பு மலரை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட விஐடி வேந்தர் விசுவநாதன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:
அமைச்சர் செங்கோட்டையன்: சேலத்தில் பிறந்து, இந்திய அளவில் பல்வேறு தலைவர்களுடன் சிறந்த முறையில் பழகி, பண்பாளராகவும், அனைவரது பாராட்டையும் பெற்றவராக வாழ்ந்து காட்டியவர் ராஜாராம்.
குறிப்பாக, அவரது வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கும்போது, உண்மையிலேயே ராசாராமின் பண்பும், மனிதநேயமும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.
பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர்: “சாதி, மதம், இனம், மொழியைக் கடந்து அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். பதவிகளைவிட ராஜாராம் விட்டுச் சென்ற அரசியல் பண்பாடும், மனிதநேயமும் பாராட்டத்தக்கவை.
அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக இருந்தவர். அந்தக் காலத்தில் ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல நேரடியாக மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்க வேண்டும்.
அதுபோன்ற அரசியலைத் தொடங்கி பொதுநலனுக்காக உழைத்தவர் ராஜாராம். பெரியார், அண்ணா, ராஜாஜியுடன் நட்பு பாராட்டியவர். ராஜாராமின் நினைவு ஒரு மிகப்பெரிய முன் உதாரணமாகும்.
விஐடி வேந்தர் விசுவநாதன்: “கடந்த 40 ஆண்டுகளாக ராசாராமுக்கும் எனக்கும் தொடர்பு உண்டு. எம்எல்ஏ, எம்.பி, அமைச்சர், சபாநாயகர் போன்ற பதவிகளை வகித்தாலும் ஒரு குறைகூட சொல்லமுடியாத அளவுக்கு இருந்தவர். அனைத்து கட்சியில் இருந்தும் தலைவர்கள் வந்துள்ளனர். அதனால் தான் ராசாராம் சர்வகட்சி தலைவராக இருக்கிறார். இவ்வாறு பேசினர்.