திமுக கூட்டணியில் இருந்து ஐயுஎம்எல் விலகல்: 60 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்தது

தவெக ஆட்சி தொடர முழு ஆதரவு
சென்னையில் நேற்று நடைபெற்ற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழுக் கூட்டம்.

சென்னையில் நேற்று நடைபெற்ற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழுக் கூட்டம்.

Updated on
2 min read

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விலகுவதாக அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார். இதன்மூலமாக இரு கட்சிகளுக்கும் இடையிலான 60 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் ஐயுஎம்எல் வெற்றி பெற்றது. பிறகு தவெக ஆட்சியமைக்க அக்கட்சி தனது ஆதரவை வழங்கியது. இதையடுத்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகான் நியமிக்கப்பட்டார். மேலும், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழுவில் வாணியம்பாடி எம்எல்ஏவும், சட்டப்பேரவைக் கட்சித் தலைவரான எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷாவும் இடம்பெற்றார்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்: இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வரவேற்புரையாற்றினார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், ‘தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து தவெக ஆட்சி அமைய ஐயுஎம்எல் ஆதரவு அளித்ததோடு, முதல்வர் விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகித்து வருகின்றது. இன்றுள்ள அரசியல் சூழலில் திமுக கூட்டணியில் நாம் தொடர்ந்து பயணிக்க இயலாது. இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்’ என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

இதையடுத்து செய்தியாளர்களிடம் காதர் மொய்தீன் கூறிய தாவது: கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி வந்துவிடும், மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராகி விடுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் கடவுளின் எண்ணம் வேறாக இருந்துள்ளது. வெற்றிக்கு உழைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி. தவெகவுக்கு ஏன் ஆதரவு கொடுத்தோம் என ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளோம். 60 ஆண்டுகள் திமுகவுடன் பயணித்தோம்.

ஆளுநர் ஆட்சி வந்தால், மத்திய பாஜக ஆட்சிதான் தமிழகத்தில் திணிக்கப்படும் என்ற நிலைமை வந்துவிடும். அதற்கு நாங்கள் காரணமாகி விடக்கூடாது என தவெகவுக்கு ஆதரவு அளித்தோம். தவெகவுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவை அளித்தும், நாங்கள் கேட்காத ஒன்றை அதாவது அமைச்சரவை பதவியை கொடுத்தார்கள். இந்த ஆட்சி தொடர நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்போம். ஆட்சி நன்றாக இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.

இனி தொடர முடியாது: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியில் இனி தொடர முடியாது. அதனால் திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம். இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். திமுக கூட்டணிக்கு ஓட்டுபோடுவதுதான் இஸ்லாம் சமூகத்தின் 6-வது கடமை என நான் கூறியதாக சொல்வதில் உண்மை யில்லை. ஜனநாயகத்துக்காக வாக்களிப்பதுதான் 6-வது கடமை என்றுதான் அப்போது கூறினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>சென்னையில் நேற்று நடைபெற்ற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழுக் கூட்டம்.</p></div>
“என் செல்வாக்கை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்” - ட்ரம்புக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பதிலடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in