

தென்காசியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விவசாய அணி மாநில பொதுக்குழு கூட்டத்தில் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் பேசினார்.
“தமிழகத்தில் முஸ்லிம்கள் 7% உள்ளதால் திமுககூட்டணியில் முஸ்லிம்களுக்கு 16 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்” என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் முகம்மது அபூபக்கர் தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சியின் விவசாய அணி மாநில பொதுக்குழு கூட்டம் தென்காசியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது அபூபக்கர் கூறியதாவது: தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணி பலமான, ஒற்றுமையான, கொள்கைரீதியான கூட்டணியாக உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி, கொள்கை இல்லாத கூட்டணியாக உள்ளது. கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று பழனிசாமியே கூறி வருகிறார். கொள்கை இல்லாத கூட்டணியில் இருந்துகொண்டு திமுக-வை பற்றி விமர்சிப்பதற்கு அவருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
நடிகர் விஜய் தவறான தகவல்களை கூறி வருகிறார். அவரது பேச்சுகளில் எந்தவித முதிர்ச்சியும் இல்லை. தீய சக்தி என்ற அவருடைய சொல்லாடல் அனைத்துக் கட்சிகளாலும் விமர்சிக்கப் படுகிறது. திமுக-வை மட்டுமே விமர்சிக்கும் விஜய் நாட்டுக்கும், சிறுபான்மை சமூகத்துக்கும் பல்வேறு தீமைகளை செய்து, தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக-வை பற்றி பேசுவதில்லை; அதிமுக-வைப் பற்றி பேசுவதில்லை.
மூன்றாவது அணி, நான்காவது அணி மூலம் மதச்சார்பற்ற சக்திகளை நிலைகுலையச் செய்யலாம் என கனவு காண்கிறார்கள். ஓட்டைப் பிரிக்கும் எந்த அணிக்கும் சிறுபான்மை சமுதாய மக்கள்,பிற்படுத்தப்பட்ட மக்கள், தமிழகத்தை நேசிக்கக் கூடியவர்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள். திமுக கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலில் சிறப்பான வெற்றி பெற்று, மீண்டும் ஸ்டாலின் தமிழக முதல்வராகி ஆட்சி அமைப்பார்.
தமிழகத்தில் முஸ்லிம்கள் 7 சதவீதம் உள்ளனர். அந்த அடிப்படையில் திமுக கூட்டணியில் முஸ்லிம்களுக்கு 16 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். அதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் வழங்க வேண்டும். கடையநல்லூர் தொகுதியை மீண்டும் கேட்டுப்பெற உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.