“அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை” - பேரவைத் தலைவர் உறுதி

“அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை” -  பேரவைத் தலைவர் உறுதி
Updated on
2 min read

சென்னை: “சட்டப்பேரவை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசும்போது, “ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் எங்களுக்கு பதில் அளிக்கும்போது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். நீங்கள் அவற்றையெல்லாம் அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறீர்கள்.

சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதல்முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்களை விட, ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து அதிகமாக நீக்கி இருக்கிறீர்கள். அவை நிகழ்ச்சிகள் எல்லாம் நேரலையில் சென்று கொண்டிருக்கிறது.

நாங்கள் கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கிறார்கள். கேள்வி கேட்டால் பதில் சொல்லலாம், இப்போது பாட்டெல்லாம் பாடத் தொடங்கி விட்டீர்கள். இப்போது நாங்கள் சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறோமா, தொலைக்காட்சி பாட்டு (சூப்பர் சிங்கர்) நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என சந்தேகப்படும் அளவுக்கு பாட்டு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

நீங்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கினாலும், அது நேரலையாக செல்லும்போது சமூக வலைத்தளங்களில் ரீல்ஸாக அதிகமாக பகிரப்படுகிறது. இதனால் நீங்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது அர்த்தமில்லாமல் போய்விடுகிறது.

நேற்று முன்தினம் பேசிய முதல்வர் தனது அறை மேசையில் 3 கோப்புகள் இருப்பதாகவும், அதை திறந்து பார்க்க வைத்து விடாதீர்கள் என்றும், எங்கள் அரசை குற்றம் சாட்டும் வகையில் பேசியிருந்தார்.

தயவு செய்து அந்தக் கோப்புகளை முதல்வர் திறந்து பார்க்க வேண்டும். ஆதாரம் இருந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோப்புகளை திறக்க எதற்கு பயப்படுகிறார்கள், எதற்கு காலம் தாழ்த்துகிறீர்கள், இதையே 3 மாதமாக கூறி வருகிறீர்கள். ஜோசியக்காரர் சொன்னால்தான் கோப்பை திறந்து பார்ப்பீர்களா? நல்ல நேரம் ஏதாவது பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த உறுட்டல், மிரட்டலுக்கு எல்லாம் திமுக அஞ்சாது” என்றார்.

அதற்கு அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், “ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்ட கதை அனைவருக்கும் தெரியும்” என்றார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “இதற்கு முன்பு பேசும்போது எதிர்க்கட்சித் தலைவர் எங்கள் இயக்கம் மிசாவையே பார்த்த இயக்கம் என்று தெரிவித்துள்ளார், அப்படிப்பட்ட திமுகவை, தனிப்பெரும் கட்சியாக இந்த தேர்தலில் எங்கள் தலைவர் வெற்றி பெற்று தவெக என்றால் என்ன என்பதை காண்பித்திருக்கிறார். அதனால் எங்களுக்கு எந்த பயமும் கிடையாது.

நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித்துறை வெள்ளை அறிக்கை முதல்வர் அறையில் இருக்கின்றன. கண்டிப்பாக ஆதாரத்துடன் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் முதல்வர் சொல்ல வந்தார்.

நேர்மையாக வெளிப்படையாக சட்டப்பேரவையை நடத்தும் தைரியம் திமுகவுக்கு இல்லை. முதல்முறையாக தமிழகத்தில் மக்களாட்சியை நிலைநாட்டி, மக்களின் ஜனநாயக காப்பாற்றுவதற்காக பேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் தைரியமாக விட்டிருக்கிறார் முதல்வர் விஜய். திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என இருந்தது. ஏன் அதை செய்யவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் என்.ஆனந்த், “நேற்று சந்தை ஒன்றில் 70 வயது முதியவர் ஒருவர், நாங்கள் இப்போது தொலைக்காட்சியில் சீரியல் பார்ப்பதில்லை. சட்டப்பேரவை நேரலை தான் பார்த்து வருகிறோம் என தெரிவித்தார். தமிழகத்தில் முதல் முறையாக நேரலையை எங்கள் தலைவர் தான் அனுமதித்திருக்கிறார்” என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், “யாருடனும் ஆலோசிக்காமல் சுயமாகவே தனது அறிவாற்றலால் முடிவு எடுக்கும் திறமை முதல்வர் விஜய்க்கு இருக்கிறது என்பது இந்த மூன்று மாத ஆட்சியிலேயே எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோப்புகள் தயாராக இருக்கிறது என்றால், அவருடைய ஆய்வில் இருக்கிறது என்று அர்த்தம். எந்த நேரத்தில் வெளியிடுவது என்பது பற்றி முதல்வரின் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பார். அதை சவால் விடுவது போல் எடுத்துக் கொள்ளக் கூடாது” என்றார்.

அப்போது குறுகிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, “சட்டப்பேரவை நேரலை என்பது திமுக ஆட்சியில் தான் முதன்முதலாக செயல்படுத்தப்பட்டது. கேள்வி நேரத்தை முதல் முறையாக நேரலை செய்தது நாங்கள் தான். கேள்வி நேரத்தை நடத்த முடியாத நிலைதான் இப்போது நடந்து வருகிறது” என்றார்.

பின்னர் பேசிய பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், “பேரவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக வீடியோ வெளியிடுவது குறித்து பேரவை கவனத்துக்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “முதலில் நேரலை வழங்கியது திமுக ஆட்சி. ஆனால் முழுமையான நேரலை வழங்கியது முதல்வர் விஜய் தலைமையான ஆட்சி தான். மத்திய அரசுக்கு சொந்தமான அகில இந்திய வானொலிக்கு கடந்த 2 ஆண்டுகளாக நேரலை ஆடியோ வழங்கப்படவில்லை. வானொலியில் நேரலையை கேட்க நடவடிக்கை எடுத்தவர் பேரவை தலைவர் ஜேசிடி.பிரபாகர்” என்று அவர் பேசினார்.

“அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை” -  பேரவைத் தலைவர் உறுதி
“திமுக ஆட்சியில் மின் துறை கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” - அமைச்சர் நிர்மல் குமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in