

செல்வப்பெருந்தகை
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்துள்ளதாக அவர் தெரிவித்த நிலையில் அந்த தகவல் உண்மையில்லை என வருமானவரித் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரச்சாரத்துக்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று தமிழகம் வந்தார். குளச்சல், நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தச் சூழலில், நேற்று காலை முதல் தனது சென்னை கீழ்ப்பாக்கம் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு தகவலை வெளியிட்டார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில், “ராகுல் காந்தி பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்துள்ள நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் ‘சோதனை’ என்ற பெயரில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிக்குள் என்னை சட்டவிரோதமாக முடக்கி வைத்துள்ளனர். இதன்மூலம் எனது அரசியல் பணிகளை மேற்கொள்வதையும், மக்களைச் சந்திப்பதையும் தடுத்துள்ளனர்’ என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்திருக்கும் விளக்கத்தில், “தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை வீட்டில் நாங்கள் சோதனை நடத்தவில்லை. சோதனை நடத்தியதாக வெளியான தகவல் உண்மைக்குப்புறம்பானது’ என்றனர்.
இதன்தொடர்ச்சியாக ஸ்ரீபெரும்புதூரில் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மத்திய அரசின் வருமானவரித் துறை என்று கூறிக்கொண்டு சீருடை அணியாத சில அதிகாரிகள் அடக்குமுறையை ஏவி விட்டிருக்கிறார்கள். மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்ட எனது ஆதரவாளர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் சோதனை என்ற பெயரில் முற்றுகையிட்டுள்ளனர்.
மாநிலத் தலைவர் என்ற முறையில் பிரச்சாரத்துக்காக ராகுல் காந்தியை வரவேற்கச் செல்ல முடியாதபடி காலதாமதம் செய்துவிட்டு, அவர் சென்றபிறகு அதிகாரிகள் கலைந்து செல்கின்றனர். பாஜக எங்களை அடக்கி, முடக்கிவிட முடியாது. தமிழ் பேசும் அதிகாரிகள் ஒருவர்கூட சோதனையில் இல்லை” என்றார்.