

தேனி: சோத்துப்பாறை அணையின் வாய்க்கால் மதகை தவெகவினர் அத்துமீறி திறந்ததைக் கண்டித்து, பாஜகவினர் நீர்வளத்துறை அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. வடகிழக்குப் பருவமழையால் அணையில் கடந்த 22-ம் தேதி நீர் நிரம்பியது (126.28 அடி). அதைத் தொடர்ந்து, வாய்க்கால் வழியே உபரிநீர் பெரியகுளம் கண்மாய்க்குச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில், தவெக நிர்வாகிகள் சிலர் உபரிநீர் மடையைத் திறந்து பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டதாக, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். நீர் திறப்புக்கு அரசாணை வராத நிலையில், தன்னிச்சையான இவர்களின் போக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதைக் கண்டித்து, பாஜகவினர் பெரியகுளம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். அலுவலகத்துக்குள் செல்ல முயன்ற இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால், வளாகத்தின் முன்பாக அமர்ந்து கோஷமிட்டனர்.
இப்போராட்டத்துக்கு, பாஜக மாவட்டத் தலைவர் ராஜபாண்டி தலைமை வகித்தார். பெரியகுளம் நகர தலைவர் அனுஷா, மாவட்ட துணைத் தலைவர் செல்வராணி, மாவட்டச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் பாஜகவினர் பேசுகையில், ‘அரசு அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்த மதகின் சாவி எப்படி வெளிநபர்களிடம் சென்றது. அதிகாரிகளின் உடந்தை இல்லாமல் இச்செயல் நடக்க வாய்ப்பு இல்லை. அணை நிரம்பியதுமே பாசனத்துக்கு நீரை திறந்திருந்தால் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டிருக்காது’ என்றனர்.
அதிகாரி நேரில் வந்து பதில் சொன்னால்தான் கலைந்து செல்வோம் என்று அரை மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்து கோஷமிட்டனர். பின்னர், செயற்பொறியாளர் சரவணன் அங்கு வந்து பேசுகையில், ‘நீர் நிரம்பியதும் பாசன விவசாயிகள் சங்கக் கூட்டம் நடந்தது. இதில் மழை குறைந்ததால் முதலில் உபரிநீர் மூலம் குளம், கண்மாய்களில் நீர் சேகரமாகட்டும் என்று விவசாயிகள் கூறியதால், நீர் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கவில்லை.
மதகின் சாவி அலுவலகத்தில் மட்டுமல்ல விவசாய சங்க நிர்வாகிகளிடமும் இருக்கும். மடை திறப்பு குறித்து போலீஸில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
இதைத் தொடர்ந்து, பாஜகவினர் கலைந்து சென்றதால், அனுமதி பெறாமல் போராட்டம் நடத்திய பாஜகவினரை போலீஸார் கைது செய்யவில்லை. இதையடுத்து, மதகுக்கு புதிய பூட்டு ஒன்று போடப்பட்டு, அதன் சாவியை நீர்வளத் துறையினர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.