

சென்னை: ஜனவரி 15 பொங்கள் திருநாள் அன்று நடைபெற உள்ள இஸ்ரோ தொழில்நுட்ப உதவியாளர் தேர்வுகளை, உடனடியாக வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் வரும் ஜனவரி 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜனவரி 15 என்பது, தமிழ் மக்களின் பண்பாடு, வாழ்வியல், உழைப்பு, உணர்வு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் உயிர்த்திருநாளான தைப்பொங்கல் தினமாகும். தமிழர்களின் விவசாயப் பண்பாட்டையும், குடும்ப உறவுகளையும், பாரம்பரிய மரபுகளையும் பிரதிபலிக்கும் இந்த உயரியத் திருநாளில், இளைஞர்கள் தேர்வு எழுத வேண்டிய கட்டாய நிலை உருவாக்கப்படுவது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது.
இஸ்ரோ தேர்வுகளில் பங்கேற்கும் பெரும்பாலானோர், கிராமப்புற மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் என்பதையும், அவர்கள் இந்த நாளில் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட வேண்டிய உரிமை கொண்டவர்கள் என்பதையும், ஒன்றிய அரசும், இஸ்ரோவும் உணர வேண்டும்.
தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளை மதிக்காமல், தைப்பொங்கல் போன்ற தேசியப் பண்பாட்டு நாளில் அரசுத் தேர்வுகளை நடத்துவது, தமிழ் சமூகத்தின் உணர்வுகளைப் புறக்கணிப்பதற்குச் சமம்.
எனவே, ஜனவரி 15 அன்று நடைபெற உள்ள இஸ்ரோ தொழில்நுட்ப உதவியாளர் தேர்வுகளை, உடனடியாக வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றிய அரசையும், இஸ்ரோ நிர்வாகத்தையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.