ஈரோடு: ‘தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் முக்கியமாக இருக்கும்’ என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தெரிவித்தார். கோபிச்செட்டிபாளையத்தில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்து விரோத அரசு: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற முடியும் என மதுரை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. நீதிபதி சுவாமிநாதன் நேரடியாக சென்று பார்வையிட்டு வந்தார்.
இந்த அரசு இந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. முருகனுக்கு சொந்தமான இடத்தில் தீபத்தை ஏற்றுவதை எப்படி தடுக்க முடியும். வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சினைதான் பிரதானமாக இருக்கும்.
இதன்மூலம் திமுக அரசை வெளியேற்றுவோம். டிச.12-ம் தேதிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணிக்கு பழனிசாமி தலைவராக உள்ளார். தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் நிகழும். இவ்வாறு அவர் கூறினார்.