

பாஜக கூட்டணியில் தவெக இணையப் போவதாகச் செய்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில், அப்போதெல்லாம் அமைதி காத்த தவெக தரப்பு, “என்டிஏ கூட்டணி மற்றும் ராமதாஸ், சசிகலா தரப்பினருடன் தவெக கூட்டணி சேரப் போவதாகச் சொல்லப்படுவதில் துளியும் உண்மை இல்லை. யாருடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. வாக்காளர்களை குழப்ப திமுக தரப்பில் இருந்தே இது மாதிரியான வதந்திகளைப் பரப்புகிறார்கள்” என இப்போது மறுப்புத் தெரிவித்திருக்கிறது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக விஜய் டெல்லிக்கு புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக தவெக மாவட்டச் செயலாளர்களுடன் பொதுச் செயலாளர் ஆனந்த் காணொலி வழியே அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, ”தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாமா?” என அவர் கருத்துக் கேட்டதாகவும் அதற்கு மாவட்டச் செயலாளர்கள், கலவையான கருத்துகளைச் சொன்னதாகவும் முடிவில், “தலைவர் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்” என உறுதி கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது.
டெல்லிக்கு விஜய் விசாரணைக்குப் போகவிருக்கும் சமயத்தில் திடீரென இப்படி தவெக மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துக் கேட்ட விஷயம் குறித்து பலவாறாக தகவல்கள் வெளியாகின. விஜய்யை தங்கள் கூட்டணிக்கு இழுக்கக் காத்துக் கொண்டிருக்கும் பாஜக, டெல்லி விசாரணையை வைத்து அவர் மீதான விசாரணையில் ஏதாவது அழுத்தம் கொடுக்க முயற்சிக்கலாம்.
அப்படி ஏதும் இல்லாமல் விசாரணையை எளிதாக சமாளிக்கும் ஒரு உத்தியாகவே, கூட்டணிப் பேச்சுவார்த்தை ‘ஸ்க்ரீன் பிளே’யை தவெக தரப்பில் அரங்கேற்றியதாகவும் ஒரு செய்தி சொல்லப்பட்டது. அதற்கேற்ப, டெல்லியில் ஏழு மணி நேர விசாரணையை முடித்துக் கொண்டு வழக்கத்துக்கு மாறான புன்னகையுடன் கையசைத்தபடியே வெளியே வந்தார் விஜய்.
இதனிடையே இன்னொரு காரியமும் நடந்தது. மாவட்டச் செயலாளர்களுடன் கருத்துக் கேட்டுவிட்டு விஜய் டெல்லிக்குப் பயணமானது பலருக்கும் விஜய் பாஜக கூட்டணிக்குப் போகப் போகிறார் என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இந்த நிலையில் தான் அவசர அவசரமாக விஜய் விசாரணைக்கு ஆவதற்கு ஒரு நாள் முன்னதாக ஒரு கருத்துக் கணிப்பும் வெளியானது. அதில், விஜய்க்கு அமோக ஆதரவு இருப்பதாகவும் அடுத்த முதல்வர் ரேஸில் அவர் முன்னணியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இந்த விஷயத்தை எல்லாம் சுட்டிக்காட்டும் தவெக மேல்மட்ட நிர்வாகிகள் சிலர், “பாஜக-வுடன் கூட்டணி பேசுகிறார் விஜய் என்ற செய்தியை திட்டமிட்டுப் பரப்புவதே திமுக தரப்பிடம் ‘ஊதியம்’ பெறும் யூ டியூப் சேனல்கள் தான். இதன் மூலம் விஜய்க்கு ஆதரவாக இருக்கும் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களை குழப்புவதுதான் இவர்களது வேலையே.
தேர்தல் பணிகளில் சில மாவட்டங்களில் தவெக-வினர் சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்று பரவலாக தகவல்கள் வந்ததால் அதை சரிசெய்வது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காகவே காணொலி கூட்டத்தை நடத்தினார் ஆனந்த்.
அந்தக் கூட்டத்தில் சில மாவட்டச் செயலாளர்கள் கூட்டணி தொடர்பாகவும் தங்களது சந்தேகங்களையும் கருத்துகளையும் தெரிவித்தார்கள். அதையெல்லாம் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகச் சொல்லி கூட்டத்தை முடித்தார் ஆனந்த். இது தான் நடந்தது. ஆனால், கூட்டணி குறித்து கருத்துக் கேட்பதற்காகவே இந்தக் கூட்டத்தை அவர் கூட்டியதாக திட்டமிட்டு செய்திகளை பரப்பிவிட்டார்கள்.
உண்மையில் விஜய்க்கு அதிமுக அணியுடன் கூட்டணி சேர இஷ்டமில்லை. செல்வாக்கு சரிந்து வரும் பழனிசாமியுடன் கூட்டணி வைத்து அதிமுகவுக்கு ஏன் நாம் உயிருண்டாக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். அதேசமயம், இந்தத் தேர்தலில் தனது பலம் என்னவென்பதை நிரூபித்துக் காட்டி அதன் மூலம் அடுத்த தேர்தல் களத்தை முழுமையாக வென்றெடுப்பதே விஜய்யின் தொலைநோக்குத் திட்டம். 2031 தேர்தல் சமயத்தில் இப்போது களத்தில் வாள் சுற்றிக் கொண்டிருக்கும் பலபேர் காணாமல் போயிருப்பார்கள்.
அப்போது விஜய்யும் உதயநிதியும் தான் களத்தில் இருப்பார்கள். அதில்லாமல் இப்போது பழனிசாமியுடன் கூட்டணி வைத்து அவர்களை அரியணை ஏற்றிவிட்டு அடுத்த தேர்தலில் அவரை எதிர்த்து அரசியல் செய்ய அவர் விரும்பவில்லை. விஜய்யின் இந்த சிந்தனை எல்லாம் தெரியாமல், அவர் டெல்லிக்குப் போகிறார் என்றதுமே அவருக்கு அமோக ஆதரவு இருக்கிறது என்ற தொனியில் அவசர அவசரமாக ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட வைக்கிறார்கள்.
இதன் நோக்கம் என்னவென்றால், டெல்லி செல்லும் விஜய் எக்காரணம் கொண்டும் பாஜக கூட்டணிக்கு அச்சாரம் போட்டுவிடக் கூடாது. அதற்கு முன்னதாக இப்படியொரு கருத்துக் கணிப்பு வெளியானால், நமக்கே இத்தனை செல்வாக்கு இருக்கையில் நாம் ஏன் பாஜக கூட்டணிக்குப் போக வேண்டும் என விஜய் யோசிப்பார்.
அதேபோல், இந்தக் கருத்துக் கணிப்பை வெளிட பாஜக தரப்பிலும் சிலர் உந்து சக்தியாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். காரணம், பழனிசாமி - பாஜக கூட்டணியை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வரும் பாஜக தலைவர்கள் சிலர், என்டிஏ அணி வென்றுவிடக் கூடாது என்பதை தங்களின் ‘பிளான் பி’ ஆக வைத்திருக்கிறார்கள்.
அதனால், விஜய் பாஜக அணிக்கு வந்துவிட்டால் என்டிஏ அமோக வெற்றிபெற்றுவிடும் என உள்ளுக்குள் அவர்களுக்கு பதற்றம். அதனால், ‘விஜய் தனித்து நின்றாலே வெற்றி பெறுவார். அவர் என்டிஏ அணிக்குப் போவது தற்கொலைக்குச் சமம்’ என்று வெளியான கருத்துக் கணிப்பின் பின்னணியில் அவர்களும் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” என்று முடித்தார்கள். அடுத்த ஒரு மாத காலத்துக்கு கதாநாயகன் விஜய்யை வைத்து இன்னும் என்னென்ன கதை - வசனங்களை கட்டிவிடக் காத்திருக்கிறார்களோ தெரியவில்லை.