

சென்னை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிந்த சமூக வலைதளப் பதிவைச் சுட்டிக்காட்டி, “இது ஒரு முதல்வர் போடுகிற பதிவா?” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கூறினார்.
இது குறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று 1990 காலக்கட்டத்தில் இருந்து இந்து முன்னணி போராடி வருகிறது. தற்போது, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி தீபம் ஏற்றலாம் என தீர்ப்பு அளித்துள்ளார்.
இந்நிலையில், நீதிபதியின் தீர்ப்பையும் 1996, 2014, 2017-ம் ஆண்டுகளில் வெளியான தீர்ப்பையும் அமைச்சர் ரகுபதி வேண்டுமென்றே திரித்து உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார். 1996, 2014, 2017-ல் கோரிக்கைகள், அதன் தீர்ப்பும், தற்போதையை கோரிக்கை, தீர்ப்பும் வேறு வேறு. நீதிபதியின் தீர்ப்புக்கு ஆட்சேபனை இருந்தால், நியாயப்படி தர்காதான் முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால், கோயில் செயல் அலுவலர் முறையீடு செய்திருக்கிறார். அவரை, திமுக வேண்டுமென்றே தூண்டி விட்டிருக்கிறது.
அதே நேரத்தில் காவல் துறை தங்கள் கடமையை செய்யாததால், மத்திய தொழில் பாதுகாப்புப் படை அனுப்பப்பட்டது. அவர்களை நீதிபதி அனுப்பியதில் எந்த தவறும் இல்லை. 2005-ம் ஆண்டில் நடந்த அமைதிக் குழு பேச்சுவார்த்தையில், தர்கா இருக்கும் இடத்தில் இருந்து 15 மீட்டர் தூரத்தில் தீபம் ஏற்றலாம் என இஸ்லாமியர்கள் கையெழுத்திட்ட ஆவணம் இருக்கிறது.
பிரச்சினை இஸ்லாமியர்களுக்கு இல்லை. இன்று திமுக அரசு திருப்பரங்குன்றம் மலைக்கு சிக்கந்தர் மலை என பெயர் வைத்தும், ராமநாதபுரம் எம்.பி. சிக்கன் பிரியாணி சாப்பிடுவதையும், நெல்லித்தோப்பில் ஆடு வெட்டுவோம், கோழி வெட்டுவோம் என்பதையும் திமுக அரசு ரசிக்கிறது. இந்து பக்தர்களுக்கு எதிராக உச்சபட்ச அரசியலை திமுக செய்து கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 161-க்கும் மேற்பட்ட கோயில்களை இடித்திருக்கிறார்கள். சில கோயில்களை நீதிமன்றம் உத்தரவிட்டதால் இடித்தோம் என்கிறார்கள். இடித்து அப்புறப்படுத்துவதற்கு மட்டும் நீதிமன்றம் வேண்டுமாம். தீபத்தூணில் தீபம் ஏற்றுங்கள் என்றால் நீதிமன்றம் வேண்டாமாம். அதேநேரம் இதுவரை எத்தனை, சர்ச், எத்தனை மசூதிகளை இடித்திருக்கிறார்கள்?
முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது .......... அரசியலா?” என ஒரு பதிவு போடுகிறார். இது ஒரு முதல்வர் போடுகிற பதிவா? திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றக்கூடிய தீபத்துக்காக உயிரை கொடுத்து பாஜக தொண்டர்கள் துணை நிற்பார்கள்” என்றார் அண்ணாமலை.
முதல்வர் ஸ்டாலின் பதிவு என்ன? - முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், “மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ......... அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள்.
மெட்ரோ ரயில், எய்ம்ஸ், புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள்! - இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!” என்று கருத்து தெரிவித்துள்ளார்.