

சிவகங்கை மாவட்டத்துக்காரரான நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இம்முறை அந்த மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடப் போவதாக ஒரு செய்தி வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக முன் கூட்டியே நாதக வேட்பாளர்களை அறிவித்து வரும் சீமான், தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் ஏற்கெனவே மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.
எஞ்சிய ஒரு தொகுதியான காரைக்குடிக்கு மட்டும் இதுவரை அவர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதைவைத்து, அவர் இம்முறை காரைக்குடியில் களமிறங்கப் போவதாக தகவல் பரவ ஆரம்பித்திருக்கிறது.
கடந்த 2016-ல் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான், 2021-ல் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார். இரண்டு முறையுமே அவரால் வெற்றிபெற முடியவில்லை. இம்முறை எப்படியும் சட்டமன்றம் செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் சீமான், அதற்காக காரைக்குடியை தேர்வு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சிவகங்கை மாவட்ட நாதக-வினர்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டே காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இம்முறை சொந்த மண்ணில் தான் போட்டியிடுவேன்” என சூசகமாக தனது விருப்பத்தைச் சொல்லி இருந்தார் சீமான். அவரது சொந்த ஊரான அரணையூர் மானாமதுரை தொகுதியில் வருகிறது. அது தனித் தொகுதி என்பதால் அங்கு அவர் போட்டியிட வாய்ப்பில்லை.
அதனால் அவர் காரைக்குடியை தேர்வு செய்திருக்கலாம் என்று சொல்பவர்கள், “கடந்த முறை காரைக்குடியில் போட்டியிட்ட நாதக வேட்பாளர் துரைமாணிக்கம் 23,872 வாக்குகள் (11.24 சதவீதம்) பெற்றார். அப்போது காரைக்குடியில் அதிமுக-வும் திமுக-வும் நேரடியாகப் போட்டியிடவில்லை. அதற்குப் பதிலாக, பாஜக-வும் காங்கிரஸும் மோதின. காங்கிரஸ் வெற்றிபெற்றது.
அதேபோல் இம்முறையும் இந்த இரண்டு கட்சிகள் தான் இங்கே மோதக் கூடிய சூழல் இருக்கிறது. தவெக தரப்பில் டாக்டர் பிரபு தான் வேட்பாளர் என தீர்மானிக்கப்பட்டு கடந்த ஒரு வருடமாகவே அதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
காலங்காலமாக இந்தத் தொகுதியை காங்கிரஸுக்கே விட்டுக் கொடுப்பதால் திமுக தரப்பில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் சொல்லமுடியாத ஆதங்கத்தில் இருக்கிறார்கள். இதேபோல், தங்களுக்கு வாய்ப்புள்ள இந்தத் தொகுதியை பாஜக-வுக்கு விட்டுக் கொடுப்பதில் அதிமுக-வுக்கும் அவ்வளவு இஷ்டமில்லை.
இப்படி இரண்டு முக்கியக் கட்சிகளிலும் இருக்கும் அதிருப்தியாளர்கள் நாதக-வை ஆதரிக்க வாய்ப்பிருக்கிறது என சீமானுக்கு யாராவது எடுத்துச் சொல்லி இருக்கலாம். அத்தோடு தவெக வேட்பாளர் கணிசமான வாக்குகளை பிரிப்பார் என்பதால் நாதக-வுக்கு குருட்டு யோகம் அடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் காரைக்குடிக்கான வேட்பாளரை அறிவிக்காமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் சீமான்” என்கிறார்கள்.