

அமைதியாக இருங்கள் அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று காங்கிரஸ் தலைமை படித்துப் படித்துச் சொன்னாலும் தமிழக காங்கிரஸார் தளும்பிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அடக்கமாக இருந்தாலும் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ்குமார் விடுவதாக இல்லை. கூட்டணி ஆட்சி குறித்து யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம் என மேலிடப் பார்வையாளர் கிரீஷ் சோடங்கர் கண்டிஷன் போட்டாலும் கேட்பதாய் இல்லை ராஜேஷ்குமார்.
இவருக்கு துணையாக கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி-யான விஜய் வசந்தும் இப்போது ‘கூட்டணி ஆட்சி’ கோஷத்தில் சேர்ந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ்குமார், “வரும் தேர்தலில் திமுக-விடம் அதிக தொகுதிகளை கேட்டு வாங்கி, அமைச்சரவையில் பங்கு பெறுவோம். குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக வெற்றிபெறும் காங்கிரஸ் கட்சி, இம்முறை வெறும் எம்எல்ஏ பதவியோடு திருப்தி அடையாது. அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது” என்றார்.