“வண்டலூர் பள்ளிச் சம்பவம்... காவல் துறை லட்சணம் இதுதானா?” - பழனிசாமி காட்டம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளிக்குள் மர்மநபர்கள் புகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், மாணவியின் பெற்றோர் அளித்த பேட்டியை நீக்க வேண்டும் என காவல் துறை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ‘இதுதான் காவல் துறை செயல்படும் லட்சணமா?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘சென்னை வண்டலூர் அருகே அரசு பள்ளிக்குள் மர்ம நபர்கள் புகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ள நிலையில், இதனை விசாரிக்க வேண்டிய காவல் துறையோ, செய்தி வெளியிட்ட ஊடகங்களை அவற்றை “Delete” செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது.

முதல்வர் விஜய்... உங்கள் ஆட்சியில் காவல் துறை செயல்படும் லட்சணம் இதுதானா?

அரசுப் பள்ளி பாதுகாப்பற்ற இடமாக மாறி, ஒரு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பதை உங்கள் காவல் துறை விசாரிப்பதை விட்டுவிட்டு, செய்தி வந்த மறுகணமே “ஃபேக் நியூஸ்” என்று முந்திக்கொண்டு வந்து நிற்பது வெட்கக்கேடான செயல்.

தமிழ்நாட்டில் விஜய் ஆட்சியில் காவல் துறையும் ரூட் மாபியா பாணியை கடைபிடிக்க உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா?

ஹை ப்ரொஃபைல் வழக்குகள் என்றால் ஒரு சட்டம், சாமானிய மக்களுக்கு வேறொரு சட்டமா?

காஸ்ட்லி முதல்வர் என்று நான் இவரை சொன்னது இந்த மனோபாவத்தின் காரணமாகத்தான். தற்போது இந்த அரசின் செயல்கள் அதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் பெண்களின், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், பாலியல் புகார்களை முறையாக விசாரிக்காமல் செய்தியே வரக்கூடாது என்று ஊடகங்களை மிரட்டும் இந்த புதிய பாயாச - பாசிச அரசுக்கு எனது கடும் கண்டனம்.

வண்டலூர் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தொடர் சரிவுக்குப் பிறகு தங்கம் விலை உயர்வு - இன்றைய விலை நிலவரம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in