

கோப்புப் படம்
சென்னை: மகளிர் உரிமைத்தொகையை நிறுத்த சூழ்ச்சி நடந்ததா? என்பது தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது. சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீது நேற்று நடந்தவிவாதம் வருமாறு:
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: சட்டப்பேரவை கூடுவது குறித்து அறிவிப்பு வெளியானவுடன் எந்த அறிவிப்பு என்றாலும் அதை சட்டப்பேரவையில்தான் வெளியிட வேண்டும் என்பது மரபு. ஆனால், மரபை மீறி இரவோடு இரவோடு வருங்காலத்தில் விடுவிக்கப்பட வேண்டிய நிதியை, நடைமுறையில் உள்ளதிட்டத்தை நிறுத்த முயற்சிப்பதாக ஒரு கற்பனையான காரணத்தைச் சொல்லி, மகளிரின் வங்கிக்கணக்கில் வரவு வைப்பது வேடிக்கையாக உள்ளது. இது உங்களின் தேர்தல் பயத்தை காட்டுகிறது.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு: முதல்வர் தனது மதிநுட்பத்தால் சதி திட்டத்தை முறியடித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகையை நிறுத்துவதற்காக யார் யார் டெல்லியில் நீதிமன்ற கதவை தட்டினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
பழனிசாமி: அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளோம். இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை மரபை மீறி மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாகஉயர்த்தப்படும் என அறிவித்துள்ளீர்கள். முன்கூட்டியே உரிமைத்தொகையை வழங்க வேண்டிய அவசியம் என்ன?
அமைச்சர் எஸ். ரகுபதி: பரிசுபொருள் விநியோகம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மார்ச் மாதம் விசாரணைக்கு வர உள்ளது. 2-3 மாதங்களுக்கு சேர்த்தும் கோடைகாலத்தை கருத்தில்கொண்டும் முன்பணம் வழங்கியதில் தவறில்லை.
அமைச்சர் எ.வே.வேலு: கருணாநிதி முதல்வராக இருந்தபோது பொங்கல் பரிசு ரூ.100 வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றம்ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வரானதும் பொங்கல் பரிசை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கினார். ஏன் உயர்த்தி வழங்கினீர்கள் என்று யாரும் கேட்கவில்லையே, உரிமைத்தொகையை முன்கூட்டியே வழங்கியது அரசின் கொள்கை முடிவு.
அமைச்சர் கீதா ஜீவன்: பாஜகவைச் சேர்ந்த உபாத்தியாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அந்த வழக்கு, உரிமைத்தொகை விடுவிக்கப்பட்ட நாளுக்கு மறுநாள் விசாரணைக்கு வர இருந்தது உண்மை. இந்த சூழ்ச்சியை தமிழக முதல்வர் தனது சாணக்கியத்தனத்தால் முறியடித்துள்ளார்.
பழனிசாமி: நீங்கள் செய்ததுதான் சூழ்ச்சி.
அமைச்சரம் தங்கம் தென்னரசு: உங்கள் கூட்டணியான பாஜக, பிஹாரில் தேர்தல் நேரத்தில் மகளிர் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்தது சூழ்ச்சியா?இவ்வாறு விவாதம் நடந்தது.
மாநில சுயாட்சி விவகாரம்: இதைத்தொடர்ந்து மாநில சுயாட்சி விவகாரம் குறித்து நடந்த விவாதம் வருமாறு:
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: மாநில சுயாட்சி குறித்து முதல்வர் இப்போது பேசுகிறார். கடந்த 15 ஆண்டு காலம் மத்திய அரசில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் நீங்கள் பங்கு வகித்தீர்கள். அப்போதெல்லாம் மாநில சுயாட்சி பற்றிஉங்களுக்கு நினைவுக்கு வரவில்லை. இப்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களை ஏமாற்ற மாநில சுயாட்சி குறித்து பேசுகிறீர்கள்.
அமைச்சர் எஸ்.எஸ்,சிவசங்கர்: மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதுதான் திமுகவின் கொள்கை. அந்த வகையில்மாநில சுயாட்சி குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தற்போதைய பாஜக ஆட்சியில், மாநில சுயாட்சி குறித்து வலியுறுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. மாநில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன.
அமைச்சர் எ.வ.வேலு: மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதால் மாநில சுயாட்சி குறித்து மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.