

புதுடெல்லி: மாநில அரசுகளால் வழங்கப்படும் இலவச கலாச்சாரம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவில் பாதிப்பதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மின்சார திருத்த விதிகள் 2024-ன் கீழ் சில விதிகளை எதிர்த்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கும் மாநில அரசின் முடிவைக் குறிப்பிட்ட நீதிபதிகள், ‘காலையில் இருந்து மாலை வரை இலவச உணவு, சைக்கிள், மின்சாரம் என அனைத்தையும் இலவசமாக வழங்கினால் நாட்டில் யார் தான் வேலை செய்வார்கள்?’ என்று கேள்வி எழுப்பினர்.
நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையில் இருக்கும் சூழலில், வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தாமல் இத்தகைய இலவசங்களை வாரி வழங்குவது வருத்தமளிப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மக்கள் வரிப்பணத்தில் 25 சதவீதத்தை மாநிலத்தின் கட்டமைப்பு மேம்பாட்டிற்குப் பயன்படுத்தாமல், தேர்தலை இலக்காகக் கொண்டு இலவசங்களை வழங்குவது நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஏழைகளுக்கு உதவுவது அரசின் கடமைதான். ஆனால் தகுதியுள்ளவர்களுக்கும் தகுதியற்றவர்களுக்கும் ஒரே மாதிரியாக இலவசங்களை வழங்குவதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டனர். மாநில அரசுகள் இலவசங்களை வழங்குவதற்குப் பதிலாக, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிய அவர்கள் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் பிற தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.