

மதுரை தல்லாகுளம் நீர்வளத்துறையின் நிலநீர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்புள்ள நிலத்தடி நீர்மட்டத்தை அளவீடு செய்யும் மையம்.
மதுரை: பருவமழை பொய்த்து வைகை ஆறு உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் வறட்சிக்கு இலக்காகிவரும் நிலையில், மதுரை மாநகரில் எங்கு ஆழ்துளை கிணறு போட்டாலும் 30 அடியில் நிலத்தடி நீர்மட்டம் கிடைப்பதாக நீர்வளத்துறை நிலநீர் பிரிவின் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது திகைப்பூட்டுவதாக அமைந்துள்ளது.
தமிழக அரசின் நீர்வளத்துறையின்கீழ் நிலநீர் பிரிவு இயங்கி வருகிறது. இந்த அமைப்பினர் மாநிலம் முழுவதும் மாவட்டந்தோறும் நிலத்தடி நீர்வளத்தை பாதுகாக்கும் வகையில் கண்காணிப்பு பணி, செறிவூட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் நீர்வளத் துறையின்கீழ் நிலநீர் பிரிவு மாதந்தோறும் ஆய்வு செய்ததில் தற்போது கடந்தாண்டை விட 1 மீட்டர். நீர்மட்டம் மட்டுமே குறைந்துள்ளதாக கண்டறிந்துள்ளனர். மேலும், அவர்கள் மதுரை மாவட்டத்தில் எந்த இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தாலும் சராசரியாக 10 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைப்பதாக அவர்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. பல இடங் களில் 1000 அடிவரை ஆழ்துளை கிணறு அமைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதே பிரச்சினையாக உள்ளது.
இதுகுறித்து நிலநீர் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: துறை சார்பில் நிலத்தடி நீர்மட்டத்தை அளவீடு செய்ய 150-க்கும் மேற்பட்ட பீசோமீட்டர்ஸ் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளோம். அதேபோல் விவசாயிகள் பயன்படுத்தும் திறந்தவெளி கிணறுகளையும் மாதந்தோறும் ஆய்வு செய்து அறிக்கை அளிப்போம். அதன்படி கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 9.44 மீட்டர் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 10.07 மீட்டருக்கு கீழ் இறங்கியது.
இதன் மூலம் 0.63 மீட்டர் நீர்மட்டம் குறைந்துள்ளது. கடந்த ஜூலையில் 8.94 மீ ஆக இருந்தது ஆகஸ்ட் மாதத்தில் 10.07 மீட்டர் சென்றுள்ளது. இதன் மூலம் ஒரே மாதத்தில் 1.13 மீட்டர் நீர்மட்டம் குறைந்துள்ளது. அதேபோல், திறந்தவெளி கிணறுகளில் கடந்தாண்டு ஆக. 5.50 மீட்டர். ஆக இருந்தது. நடப்பாண்டு ஆகஸ்டில் 6.22 மீட்டர் சென்றுள்ளது.
கடந்தாண்டை ஒப்பிடும் போது 0.72 மீட்டர் நீர்மட்டம் குறைந்துள்ளது. அதேபோல், ஜூலை மாதம் 5.32 மீட்டர் ஆக இருந்தது. நடப்பு மாதம் 6.22 மீட்டர் சென்று, 0.90 மீட்டர் நீர்மட்டம் குறைந்துள்ளது’’ என்று கூறினர்.
10 ஆண்டுகளில் 350 அடி நிலத்தடி நீர்மட்டம் வீழ்ச்சி
இதுகுறித்து மதுரை மாவட்ட போர்வெல் ரிக் உரிமையாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பி.சுரேஷ் கூறுகையில், ‘‘வைகை ஆற்றை ஓட்டியுள்ள ஆரப்பாளையத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 300 அடியில் தண்ணீர் கிடைத்தது. தற்போது 650 அடியில்தான் தண்ணீர் கிடைக்கிறது. வண்டியூர் கண்மாயை ஒட்டியுள்ள கே.கே.நகரை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 150 அடியில் தண்ணீர் கிடைக்கிறது.
பி.சுரேஷ்
மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் 200 அடியில் தண்ணீர் கிடைக்கிறது. அதற்கு காரணம் மாநகர் பகுதியில் வணிக நிறுவனங்கள் அதிகமாக இருப்பதால் தண்ணீர் பயன்பாடு குறைவு. புறநகர் பகுதியில் வீடுகளின் எண்ணிக்கையும், தண்ணீர் செலவழிப்பதும் அதிகரிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதன் மூலம் நீர்மட்டத்தை அதிகப்படுத்தலாம்,’’ என்றார்.