துரோகத்துக்கும் எட்டப்பருக்கும் என்ன தொடர்பு? - ராகுல் காந்தி பேச்சால் வெடித்த வரலாற்று சர்ச்சை

ராகுல் காந்தி | கோப்புப் படம்
ராகுல் காந்தி | கோப்புப் படம்
Updated on
2 min read

சென்னை: ‘தமிழகத்தில் துரோகிகளுக்கு பெயர் எட்டப்பன்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியது, சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால், திருநெல்வேலி சீமை கட்டபொம்மு வரலாறு குறித்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

தமிழகத்துக்கு சமீபத்தில் வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, மாமல்லபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘‘தொகுதி மறுவரையறை வாயிலாக தமிழக மக்களின் உரிமையை பறிக்க பாஜக அரசு சதி செய்கிறது. தமிழகத்தில் எட்டப்பன் என்ற ஒரு முக்கிய கதாபாத்திரம் உள்ளது. அந்தப் பெயர் துரோகத்தின் அடையாளமாக இருக்கிறது. யாராவது தமிழகத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கின்றார்கள் என்றால், அவர்கள்தான் துரோகிகள்’’ என்று பேசியுள்ளார்.

ராகுல் காந்தியின் எட்டப்பன் பேச்சுக்கு ஆய்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ‘சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கப்படும் பாஞ்சாலக்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு வரலாற்றில், அவரை காட்டிக் கொடுத்தவர் எட்டயபுரம் பாளையக்காரர் எட்டப்பர் என்று சித்தரிப்பது வரலாற்று பிழை’ என்று சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சென்னை அருங்காட்சியகத்தின் ஓய்வுப் பெற்ற உதவி இயக்குநரும், வரலாற்று ஆய்வாளருமான ஜெ.ராஜாமுகமது ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: “மதுரை நாயக்கர் மன்னர்களுக்கு ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி சீமையில் இருந்த 74 பாளையங்களில் எட்டயபுரம் பாளையக்காரராக எட்டப்ப நாயக்கரும், பாஞ்சாலக்குறிச்சி பாளையக்காரராக கட்டபொம்மு நாயக்கரும் இருந்தனர்.

அண்டை பாளையக்காரரான கட்டபொம்மு அடிக்கடி எல்லையோர கிராமங்களை சூறையாடுவதால் இவர்களுக்குள் தீராத பகை ஏற்பட்டது. 18-ம் நூற்றாண்டின் இறுதியில் நம் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதையும் தங்களது ஏகபோக சொத்தாக்கி கொண்டனர். தங்களுக்குள் இருந்த பகையை தீர்த்துக்கொள்ள நினைத்த நம் நாட்டு மன்னர்கள் ஆங்கிலேயருடன் கைகோத்தனர். அந்த வகையில் தனது தீராத பகையாளியான கட்டபொம்முவை ஆங்கிலேயர்கள் வெற்றிக்கொள்ள எட்டப்பர் தனது படை உதவியை வழங்கினார்.

ஆங்கிலேயருக்கு அடிபணிந்து ஒழுங்காக கப்பம் கட்டி வந்த கட்டபொம்மு, 1796-ம் ஆண்டில் இருந்து சரிவர கப்பம் கட்டவில்லை. கட்டபொம்முவை அழைத்த ராமநாதபுரம் கலெக்டராக இருந்த ஜாக்சன், வரி பாக்கி தொடர்பாக பேசுவதற்கு பதில் அவரை ஏளனமாக நடத்தினர். இதன் காரணமாக அவர் ஆங்கிலேய எதிர்ப்பு எண்ணத்திற்கு ஆட்பட்டார்.

ஆங்கிலேயர் - கட்டபொம்மு உறவு சீர்குலைந்ததன் காரணமாக கடந்த 1799-ம் ஆண்டு செப்.5-ம் தேதி ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை தகர்த்தனர். அங்கிருந்து கட்டபொம்முவும், அவரது தம்பி ஊமைத்துரையும் தப்பியோடினர். அப்போது ஆங்கிலேயர்களுக்கு கட்டுப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் படையினர், திருமயம் வட்டம் திருக்களம்பூருக்கு அருகேயுள்ள காளியாப்பூர் காட்டுப்பகுதியில் ஒளிந்திருந்த கட்டபொம்மு, ஊமைத்துரை மற்றும் சில உறவினர்களை பிடித்து ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தனர். ஆக மொத்தத்தில் இது அரசியல் ரீதியாக எதிரிகளைத் தேடி கண்டுபிடித்ததற்கு சமமானதே ஆகும்.

தொண்டைமானிடம் கட்டபொம்மு தன்னை காப்பாற்றும்படியோ, அடைக்கலம் கேட்டு வந்ததாகவோ எந்தவிதமான வரலாற்றுச் சான்றுகளும் இல்லை. அடைக்கலம் புகுந்தவரை நயவஞ்சகமாக எதிரியிடம் ஒப்படைப்பதே காட்டிக் கொடுத்தல் (Betrayal) ஆகும். ஆங்கிலேயரின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்ட தொண்டைமான், கட்டபொம்முவை பிடித்து கொடுத்ததும், எட்டப்பர் அவர்களுக்கு படை அனுப்பி உதவியதும் அரசியல் மரபு.

காட்டிக் கொடுத்தவர்கள் எட்டப்பன்; தொண்டைமான். என்பது நவீன காலத்தில் வரலாற்று ஏடுகளில் திணிக்கப்பட்ட இடைச்செருகலாகும். அரைகுறை செய்திகளின் அடிப்படையில் கட்டபொம்முவை உயர்த்திக்காட்ட எட்டப்பன், தொண்டைமானை பலிகடாக்கியுள்ளனர். திரைப்பட வசனங்களெல்லாம் ஒருபோதும் வரலாறாகிவிட முடியாது. ஆகவே காட்டிக் கொடுத்தவர்கள் எட்டப்பன், தொண்டைமான் என்பதோ, புதுக்கோட்டை காட்டிக் கொடுத்த ஊர் என்று சொல்லுவதோ வரலாற்று ரீதியாக சரியல்ல என்பது நடுநிலை ஆய்வாளர்களின் முடிவாகும்.

ராகுல் காந்திக்கு தமிழகத்தின் இந்த வரலாறு நுண்ணியமாக தெரிவதற்கு வாய்ப்பில்லை. அவர் தமிழகத்தின் வரலாற்றை முழுமையாக படித்திருப்பார் என்றும் கருத முடியாது. தமிழகத்தில் உள்ள யாரோதான் வரலாறு தெரியாமல் இந்த செய்தியை அவரிடம் தெரிவித்துள்ளனர். உண்மையில் துரோகிகள் என்பதன் அடையாளம் எட்டப்பன் என்று அவர் பேசியது தவறான வார்த்தை பிரயோகம். ராகுல் காந்தி பேசியதை எடுத்து கொண்டு, எட்டப்பர் குறித்த தவறான வரலாற்றை தற்போதைய தலைமுறையினர் தொடரக் கூடாது என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கை” என்று அவர் கூறினார்.

‘பாரதி’ பட்டம் கொடுத்த எட்டப்பர்!

கி.பி.1567-ல் ஜகவீர ராமகுமார எட்டப்ப நாயக்கரால் எட்டயபுரம் ஜமீன் தோற்றுவிக்கப்பட்டது. அவரை தொடர்ந்து வந்த அவரது வம்சாவழியினர் தங்களது பெயருடன் எட்டப்ப நாயக்கர் என்ற பட்டப்பெயரையும் சேர்த்துக் கொண்டனர்.

‘காட்டிக்கொடுத்தவர் எட்டப்பர்’ என்ற தீரா பழிச்சொல் நீ்ண்டாலும், எட்டயபுரம் ஜமீன்தார்கள் தமிழுக்கும், இசைக்கும் செய்த தொண்டுகள் ஏராளம். சுப்ரமணியின் கவித்திறனை வியந்து அவருக்கு 11 வயதிலேயே ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கியவர் எட்டயப்புரம் வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கர். பின்னர் அவரே மகாகவி சுப்ரமணிய பாரதி ஆனார் என்பது உலகறிந்த வரலாறு.

ராகுல் காந்தி | கோப்புப் படம்
“காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசைப் போல தமிழக அரசு செயல்படவில்லை” - இபிஎஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in