தவெக அரசின் துணையோடுதான் போதைப்பொருள் கடத்தல் நடக்கிறதா? - இபிஎஸ் கேள்வி

ADMK meet on Dec.31

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

Updated on: 
1 min read

சென்னை: ‘தவெக நாகை மாவட்ட நிர்வாகி பூபாலன் தொடர்பான மாபெரும் போதைப்பொருள் வழக்கு பற்றி முதல்வர் பதில் சொல்லாமல் மவுனம் காப்பது ஏன்? போதைப்பொருள் விவகாரம் ஆளுங்கட்சி தலைமைக்கு தெரிந்து, அவர்கள் துணையோடு தான் நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தவெக நாகை மாவட்ட நிர்வாகி பூபாலன் தொடர்பான மாபெரும் போதைப்பொருள் வழக்கு பற்றி மத்திய நிதி அமைச்சகம் செய்தி வெளியிட்டும் இன்று வரை தமிழக முதல்வர் பதில் சொல்லாமல் மவுனம் காப்பது ஏன்?

18.10.2026 அன்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், “சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்களில் ஒன்று” என்று கூறியுள்ளது. இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா முதல்வர் விஜய்?

இது ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் நெட்வொர்க் ஆக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு பொறுப்பில் இருக்கின்ற முதல்வராக, குறைந்தது ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சிக்காரரின் இந்த வால்டர் வைட் பெஹவியர் குறித்து முதல்வர் விஜய் வாய் திறப்பார் என்று காத்திருந்து பார்த்தால், சட்டசபையில் எதிர்கட்சி பேசும் போது எப்படி இருப்பாரோ, அதேபோல் மவுன சாமியாராகவே இருக்கிறார்.

கடந்த ஆட்சியில், ஜாபர் சாதிக் வழக்கில் மெத் போதைப் பொருளுக்கான சூடோஎபெட்ரின் என்ற மூலப்பொருள் சிக்கிய வழக்கே மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தவெக நிர்வாகி பூபாலன் வழக்கிலோ, முழுமையாக உருவாக்கப்பட்ட மெத் கிரிஸ்டல்களே, அதுவும் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 கிலோ சிக்கி இருக்கிறது.

ஆளுங்கட்சி பின்னணியில் இவ்வளவு பெரிய சர்வதேச போதைக் கடத்தல் நடந்திருக்கும் போது, யாருக்காக போதை எதிர்ப்பு மாரத்தான் ஓடிக்கொண்டு இருந்தார் ரீல்ஸ் முதல்வர்? இந்த லட்சணத்தில், இதுகுறித்து செய்தி வெளியிடும் ஊடகங்களை தவெக நாகை நகரச் செயலாளர் பால்ராஜ் என்பவர் மிரட்டல் வேறு விடுக்கிறாராம்.

அப்படியென்றால், இந்த போதைப்பொருள் விவகாரம் ஆளுங்கட்சி தலைமைக்கு தெரிந்து, அவர்கள் துணையோடு தான் நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? உங்கள் கட்சிக்காரர் குற்றத்திற்கு பொறுப்பேற்று பதில் சொல்ல முடியாமல், ஊடகங்களை மிரட்டினால் மட்டும் செய்தி மறைந்து விடுமா?

முதல்வர் அறிந்துக் கொள்ள நான் சொல்வது, இந்த போதைப்பொருளைக் கூட உங்கள் அரசின் காவல்துறை பிடிக்கவில்லை. மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அமைப்பு தான் பிடித்திருக்கிறது. இதற்கே நீங்களும், உங்கள் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும். மாற்றம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்திருக்கும் உங்களிடம் இருந்து இது பற்றி ஒரு விளக்கமாவது வருமா?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ADMK meet on Dec.31
முதல்வர் விஜய் குறித்து அவதூறுப் பேச்சு: திமுக பெண் கவுன்சிலருக்கு சம்மன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in