

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன் சத்திரம், ஆத்தூர், நிலக் கோட்டை, நத்தம், வேடசந்தூர் ஆகிய 7 தொகுதிகள் உள் ளன. கடந்த 2016, 2021 சட்டப் பேரவைத் தேர்தல்களில் திமுக 4 தொகுதிகளிலும், அதிமுக 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
இந்த முறை 7 தொகுதிகளையும் எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று திமுக வியூகம் வகுத்து வருகிறது. கடந்த முறை திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் போட்டியிட்டது.
இந்த முறை இந்த தொகுதியில் திமுகவே நேரடியாக களம் இறங்க முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல்லில் மக்கள் பிரதிநிதியாக எம்.பி. உள்ளதால், இந்த முறை அந்த கட்சி திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியை கேட்காமல், அதற்கு பதிலாக வேறு மாவட்டத்தில் தொகுதியை பெற முயற்சிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதேபோல், கடந்த முறை நிலக்கோட்டை தொகுதி, கடைசி நேரத்தில் மக்கள் விடுதலைக் கட்சி தலைவர் முருகவேல் ராஜனுக்கு ஒதுக்கப்பட்டது. இவர் திமுக சின்னத்தில் போட்டியிட்டபோதும் இவருக்கு போதிய ஒத்துழைப்பை திமுகவினரே தராததால் தோல்வியடைந்தார் என பேச்சு எழுந்தது.
இந்த முறை திண்டுக்கல், நிலக்கோட்டை உட்பட 7 தொகுதிகளிலும் திமுக நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தி களம் காண கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.
7 தொகுதிகளிலும் திமுக போட்டியிடும் பட்சத்தில் கடந்த முறை பெற்ற 4 தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்கின்றனர் திமுகவினர்.