

சென்னை: ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்காவிட்டால், அக்கட்சி உடனான கூட்டணியில் இருந்து விலகி, தமிழகத்தில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள தவெக, முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பணிகளை தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாகவே, வடமாநிலங்களில் ‘ரீல்ஸ்’ பரப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “எதிர்காலத்தில் தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டதைத் தொடர்ந்து, விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெகவினர் பேசத் தொடங்கினர்.
இது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதையடுத்து, தவெக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ளவும் காங்கிரஸ் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என தவெகவினர் சொல்வதை காங்கிரஸ் ரசிக்கவில்லை. இதன் வெளிப்பாடாகவே அக்கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், “தவெகவினர் இன்னும் ரசிகர் மன்ற மனநிலையிலேயே உள்ளனர்” என்றார்.
இதற்கிடையே, தனியார் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், ‘2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான பந்தயத்தில் விஜய் 9 சதவீத ஆதரவுடன் 3-வது இடத்தில் இருக்கிறார்’ என தெரிவிக்கப்பட்டது. இது டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, “நமது நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்து விடுங்கள்” என டெல்லி தலைமை அறிவுறுத்தியது.
அதன்படியே, சமீபத்தில் பேசிய தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், “2029 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திதான் நிறுத்தப்படுவார்” என்றார். தொடர்ந்து சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார், “2029 தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமராக வருவார். ஒருவேளை தவெக அதற்கு உடன்படாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் 2 அமைச்சர்களும் இப்பதவியில் நீடிக்க மாட்டார்கள்” என்றார். ஆனாலும், இதற்கு தவெக தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இந்த சூழலில், இவ்வளவு காலம் திமுகவை கடுமையாக எதிர்த்து வந்த காங்கிரஸ் மீண்டும் திமுகவைப் புகழ்ந்து பேசத் தொடங்கியுள்ளது. நேற்று சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், “நான் வெற்றிபெற வேண்டும் என்று தனது மகனை எனது தொகுதிக்கு அனுப்பி வைத்தார் ஸ்டாலின். திமுகவும், காங்கிரஸும் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியுள்ளது” என்றார்.
இதன்மூலம், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்காவிட்டால், அக்கட்சி உடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்பதையே காங்கிரஸ் சூசகமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் செயற்குழுவை கூட்டி, ‘ராகுலை பிரதமராக ஏற்கும் கட்சியுடன்தான் கூட்டணி’ என தீர்மானம் நிறைவேற்றவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
அதேநேரம், மீண்டும் காங்கிரஸை ஏற்க திமுக தயாராக இல்லை. அதனால், தவெகவிடம் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டால், தமிழகத்தில் தனித்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விரைவில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களையும் தீவிரப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்வர் - மாணிக்கம் தாகூர் சந்திப்பு
தவெக கூட்டணியில் இருந்து விலக காங்கிரஸ் தயாராகி வருவதாககூறப்படும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி. ஆகியோர் நேற்று திடீரென சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் தரப்பில், “தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க நாங்கள்தான் உறுதுணையாக இருந்தோம். ஆட்சியிலும் அங்கம் வகிக்கிறோம்.
தற்போது ‘விஜய்தான் பிரதமர் வேட்பாளர்’ என்று தவெகவினர் தொடர்ந்து பேசி வருவதால், அகில இந்திய அளவில் இண்டியா கூட்டணிக்குள் பிரச்சினைகள் உருவாகின்றன. எனவே, இந்த விவகாரத்துக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முதல்வர் விஜய், “கட்சியினரிடம் இதுகுறித்து பேசுகிறேன்” என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.